போதைப்பொருள் டீல்.. பிரபல ஆஸி. கிரிக்கெட் வீரர் கைது.. கடத்தப்பட்டதாக நாடகம் ஆடியது அம்பலம்
நியூசவுத்வேல்ஸ் : பிரபல முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டுவர்ட் மெக்கில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாண காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
அவர் சுமார் 2.75 கோடி மதிப்புள்ள கோகைன் எனும் போதைப்பொருள் கைமாற்றத்தில் முக்கிய பங்கு வகித்ததாக தெரிய வந்ததை அடுத்து அவரை காவல்துறை கைது செய்துள்ளது.

கடந்த ஆண்டு தான் கடத்தப்பட்டதாக கூறி இருந்தார். அது முற்றிலும் நாடகம் என்பதும், அவரை கடத்தியதாக கூறப்பட்ட நபர்கள் அனைவருமே அந்த போதைப் பொருள் கை மாற்றும் விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
ஸ்டுவர்ட் மெக்கில் ஆஸ்திரேலிய அணியில் சுழற் பந்துவீச்சாளராக 1998 முதல் 2008 வரை 44 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதில் 208 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தி இருக்கிறார். சர்வதேச அரங்கில் ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னேவின் ஆதிக்கத்தால், அவருக்கு போட்டியாக மெக்கில் அணியில் தொடர்ந்து இடம் பெற முடியாமல் போனது.
தற்போது 52 வயதாகும் மெக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தன்னை சிலர் கடத்தி விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த நபர்கள் கைது செய்யப்படும் வரை அவர் ஒன்றரை மாதம் ஊரை விட்டு வெளியேறி தொடர்ந்து காரில் பயணம் செய்தே தன் நாட்களை கழித்துள்ளார்.
அவர் கடத்தப்பட்ட சம்பவத்தை அவர் விவரிக்கும் போது, தன்னை காரில் ஏறுமாறு கையில் ஆயதங்களை வைத்துக் கொண்டு நான்கு நபர்கள் மிரட்டினர் என்றும், ஒன்றரை மணி நேரம் காரில் பயணம் செய்த பின் ஒரு கூடாரத்தில் தன்னை நிர்வாணமாக்கி அடித்து சித்ரவதை செய்து, மிரட்டிய பின், தன்னை ஒரு இடத்தில் வீசி விட்டு சென்று விட்டதாகவும் கூறி இருந்தார்.
அப்போது காவல்துறை அந்த நபர்களை கைது செய்து விசாரித்த போது அதில் ஒருவர் மெக்கில்-இன் சகோதரியின் கணவர் என்ற உண்மை தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட அனைவரும் மெக்கில்-ஐ தாங்கள் கடத்தவில்லை என்றும், அவராகவே தான் காரில் ஏறி வந்தார் என்றும், தாங்கள் அனைவரும் போதைப் பொருள் விவகாரத்தில் ஈடுபட்டோம் என்ற உண்மைகளை கூறினர்.
அதை தொடர்ந்து மறுத்து வந்தார் ஸ்டுவர்ட் மெக்கில். ஆனால், தற்போது அவருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதை உறுதி செய்துள்ள காவல்துறை அவரை கைது செய்தது. அவர் உடனடியாக பெயிலில் வெளியே வந்து விட்டார். எனினும், அவர் இந்த வழக்கில் இருந்து எளிதில் தப்ப முடியாது என தெரிய வந்துள்ளது. இதில் அவருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டால் வாழ்நாள் முழுவதும் சிறையில் தான் கழிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications