உலக கோப்பை ஆஸி. அணியில் மாற்றம்..! அந்த ரிச்சர்ட்சன் வெளியே... இந்த ரிச்சர்ட்சன் உள்ளே
கேன்பரா:ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜே ரிச்சர்ட்சன், காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான உலக கோப்பை தொடர் வரும் 30ம் தேதி முதல் துவங்குகிறது. அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே பல அணிகளின் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக அணியிலிருந்து விலக, அதற்கான மாற்று வீரர்களையும் அந்தந்த அணி நிர்வாகம் அறிவித்து வருகிறது.
இந் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பந்துவீச்சாளாரான ஜே ரிச்சர்ட்சன் தற்போது காயம் காரணமாக உலக கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் விளையாடும் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அந்த காயம் குணமாகாததால் தற்போது உலக கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஆஷஸ் தொடரில் வாய்ப்பு
உலக கோப்பைக்கு பின்னர் தொடங்க இருக்கும் ஆஷஸ் தொடரில் அவர் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் இழப்பு ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய இழப்பாகவும். ரிச்சர்ட்சன், இந்தாண்டு 12 போட்டிகளில் பங்கேற்று 24 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

மீண்டு வரவில்லை
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் மருத்துவர் டேவிட் பீக்லி கூறியதாவது: ரிச்சர்ட்சன் காயத்திலிருந்து விரைவில் மீண்டு வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பயிற்சியின் போது அவர் குணமாகாதது தெரிய வந்தது. எனவே, உலக கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.

மாற்று வீரர் அறிவிப்பு
ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய லெவன் அணியில் அவர் கட்டாயம் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார். ஜே ரிச்சர்ட்சனுக்கு மாற்று வீரராக பலரை அணி நிர்வாகம் பரிசீலித்தது. முடிவில், கேன் ரிச்சர்ட்சன் மாற்று வீரராக இடம் பெறுவார் என்று அறிவித்துள்ளது.

பலம் வாய்ந்த அணி
கேன் ரிச்சர்ட்சன் தற்போது நடந்து முடிந்த பிபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசி அசத்தியவர். ஏற்கனவே, ஸ்மித் மற்றும் வார்னர் அணிக்கு திரும்பி பழைய பார்முக்கு வந்துள்ளனர் என்பதால் ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தற்போது கேன் ரிச்சர்ட்சனும் அணியில் இடம் பெற்றுள்ளதால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications