"வெட்கக்கேடான தோல்வி".. ஆஸ்திரேலிய அணியை லெப்ட் அண்ட் ரைட் வெளுத்து வாங்கிய பாண்டிங், ஹைடன்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் டார்வினில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அணியில் மாற்றங்களை செய்ய வேண்டிய நேரம் என்றும், அதனால் இனி எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லை என்றும் கூறி உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்த தோல்வியை "மிகவும் வெட்கக்கேடான ஒன்று" என கடுமையாக சாடியுள்ளார். மேலும், அணியின் பேட்டிங் வரிசையில் உடனடியாக அதிரடி மாற்றங்களை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், குறிப்பாக தொடக்க வீரர் மற்றும் 3வது வரிசை பேட்டிங்கில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், இதை செய்வதால் இனி எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் கூறி உள்ளார்.

மற்றொரு முன்னாள் வீரரான மார்க் வாக் பேசுகையில், "ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றிலேயே நான் கண்ட மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்வி இதுதான். வங்கதேச அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களான நஹித் ரானா, ஷோரிபுல் இஸ்லாம் ஆகியோர் விளையாடாத நிலையிலும், முழு பலத்துடன் ஆடிய ஆஸ்திரேலியா இப்படி தோற்றது வேதனை அளிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு காபாவில் வெஸ்ட் இண்டீஸ் வென்றதை விட இது பெரிய அதிர்ச்சி" என்று விமர்சித்துள்ளார்.
முன்னாள் வீரர் மேத்யூ ஹைடனும் தற்போதைய ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையை கடுமையாக விமர்சித்தார். டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக களமிறங்குவதற்குப் பதிலாக, தனது வழக்கமான 5வது வரிசையிலேயே பேட்டிங் செய்ய வேண்டும் என்றும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை 5வது வரிசையில் இறக்குவது தவறான முடிவு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மார்னஸ் லாபுசேன் போன்ற சொதப்பும் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதை நிறுத்திவிட்டு, சாம் கோன்ஸ்டாஸ் போன்ற திறமையான இளம் வீரர்களுக்கு ஆஸ்திரேலிய அணி முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் ஹைடன் வலியுறுத்தினார்.
சொந்த மண்ணில் வங்கதேசத்திடம் படுதோல்வி அடைந்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோல்வியைத் தொடர்ந்து, 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சில அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
