சின்னப்புள்ளத்தனமா இருக்காரு.. கோஹ்லியை கண்டபடி விளாசும் ஆஸி. மீடியாக்கள்!
மெல்பர்ன்: விராட் கோஹ்லி, சிறு பிள்ளைத் தனமாக நடந்து கொள்கிறார் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடுமையாக தாக்கி எழுத ஆரம்பித்துள்ளன.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தனது முரட்டுத் தனத்தால் உலகமெங்கும் வெறுப்பை சம்பாதித்துள்ளது. சச்சின் போன்ற வீரர்களிடம் தங்களது ஸ்லெட்ஜிங் வித்தையை ஆஸி. வீரர்கள் முன்பு காட்டியபோது அவர் தனது பேட்டால் அதற்கு தக்க பதிலடி கொடுத்து வாயை உடைத்து அனுப்பியது வரலாறு.
இப்போது லிட்டில் சச்சின் என அழைக்கப்படும் விராட் கோஹ்லியிடம் ஆஸி. வேலையை காட்ட ஆரம்பித்தது. கோஹ்லி பேட்டாலும் பதில் சொல்லக் கூடியவர் என்றபோதிலும், இக்காலத்து இளைஞர்களுக்கே உரிய வகையில் வாயாலும் பதிலடியை கொடுக்கிறார்.

எரிச்சல்
எப்போதுமே தாங்கள்தானே மற்றவர்களை கலாய்ப்போம், இப்போது இந்தியாவிலிருந்து ஒருவர் நம்மை கலாய்த்து தள்ளுகிறாரே என்ற ஆதங்கம் ஆஸி. வீரர்களுக்கும், அந்த நாட்டு மீடியா நிருபர்களுக்கும் உள்ளது. அதிலும், கோஹ்லி, ஆஸி. ஆரம்பிக்கும் முன்பே நாக்-அவுட் குத்துகளை விட்டு, அவர்கள் ஆட்டத்தையே முடித்து வைத்துவிடுவதால் கடும் எரிச்சல் அவர்களுக்கு.

கள்ள ஆட்டம்
இப்படித்தான் டிஆர்எஸ் அப்பீல் செய்யும் முன்பாக பெவிலியனை பார்த்து சக வீரர்களிடம் கருத்து கேட்டு கள்ளாட்டம் ஆடிய ஸ்மித்துக்கு எதிராக சீறிய கோஹ்லியை, விமர்சனம் செய்தன ஆஸ்திரேலிய பத்திரிகைகள். ஏமாற்றுக்கார ஸ்மித்தை உத்தமர் போல காட்டின.

நண்பர்கள் இல்லை
இந்நிலையில், நேற்று அளித்த பேட்டியில் இனிமேல் ஆஸ்திரேலிய வீரர்களுடன் நட்பு பாராட்ட முடியாது என கோஹ்லி தெரிவித்தார். இதை பள்ளி பிள்ளைகள், நண்பர்களுடன் 'கா' விட்டுக்கொள்வதை போல சுட்டிக் காட்டி வாரியுள்ளன ஆஸ்திரேலிய ஊடகங்கள். கோஹ்லியை சிறுபிள்ளைத்தனமானவர் என்றும், கிளாஸ் வீரர் இல்லை எனவும் விமர்சனம் செய்துள்ளன.

மீடியாக்கள் சாடல்
சிட்னியிலிருந்து வெளியாகும், டெய்லி டெலிகிராப் பத்திரிகை, கோஹ்லியை ஈகோ பிடித்தவர் என வர்ணித்துள்ளது. மற்றொரு ஹெட்லைனில் கிளாஸ் வீரர் கிடையாது என வர்ணித்துள்ளது அந்த பத்திரிகை. தி ஆஸ்திரேலியன் பத்திரிகையின் பீட்டர் லலோர் எழுதுகையில், விளையாட்டின் ஸ்ப்ரிட் இந்திய அணிக்கு இல்லை. எனவேதான் ஆஸி. கேப்டன் சேர்ந்து பீர் குடிக்கலாம் என அழைத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு கேட்டே தீர வேண்டும்
ஹெரால்ட் சன் பத்திரிகை நிருபர் ரஸ்சல் எழுதியுள்ள கட்டுரையில், மன்னிப்பு என்ற வார்த்தையை விராட் கோஹ்லி கூற வேண்டும். ஸ்டீவ் ஸ்மித் தான் செய்த தவறுகளுக்காக குறிப்பாக முரளி விஜய் பற்றிய வார்த்தைக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார் என்பதை கோஹ்லி புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications