இந்த மனுசனுக்கு எப்புட்றா துரோகம் செய்ய மனசு வந்துச்சு.. டேவிட் வார்னரால் SRH ரசிகர்கள் நெகிழ்ச்சி!
ஐதராபாத்: ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர் டேவிட் வார்னரின் இன்ஸ்டாகிராம் பதிவால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணி 2016ஆம் ஆண்டு கோப்பையை வென்றதற்கு முக்கியமான காரணம் டேவிட் வார்னர். ஒரு கேப்டனாக முன்நின்று அணியை வழிநடத்தியதோடு, ஒரு பேட்ஸ்மேனாக அணியை தனியாளாக காத்து நின்றார் என்றே சொல்லலாம். இவரது தலைமையில் ஐதராபாத் அணி 2016ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு ஐதராபாத் அணி முன்னேறியது. இதற்கிடையே ஓராண்டு தடையால் 2017ஆம் ஆண்டு மட்டும் வார்னரால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை.

2021ஆம் ஆண்டு வரை ஐதராபாத் அணிக்காக மொத்த உழைப்பையும் கொட்டிய டேவிட் வார்னரை, ஒரேயொரு சீசனில் மோசமான விளையாடியதற்காக அணியில் இருக்கும் போதே ரசிகர்களுடன் அமர வைத்து சோதித்து பார்த்தது ஐதராபாத் அணி நிர்வாகம். அதன்பின்னர் ஐதராபாத் அணியில் இருந்து வெளியேறிய டேவிட் வார்னர், பின்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடி வருகிறார். என்ன தான் அணி மாறினாலும், ஐதராபாத் மீதான பாசத்தை டேவிட் வார்னர் வெளிப்படுத்த தவறியதே இல்லை.
தெலுங்கு பாடல்களுக்கு ரீல்ஸ் செய்வது, குடும்பத்தினருடன் டான்ஸ் ஆடுவது என்று இன்ஸ்டாகிராமில் டேவிட் வார்னர் அளவிற்கு அலப்பறை செய்யும் கிரிக்கெட் வீரரே இருக்க முடியாது. இதற்காக டேவிட் வார்னரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 9.9 மில்லியனாக உள்ளது. இந்த நிலையில் டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராம் வெளியிட்ட புகைப்படம் ஐதராபாத் அணி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர் ஒருவர் கடைசியாக ஐதராபாத் மண்ணில் சென்ற இடம் எது என்று கேள்வி எழுப்பியதோடு, அதனை பதிவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார். இதனை நிறைவேற்றும் வகையில், டேவிட் வார்னர் ஐதராபாத் மண்ணின் அடையாளமான சார்மினாரின் பிரம்மாண்ட புகைப்படத்தை பதிவிட்டு, இந்த இடத்திற்கு தான் நான் கடைசியாக சென்றேன் என்று பதிவிட்டுள்ளார். இதனால் நெகிழ்ந்த ரசிகர்கள் ஐதராபாத் அணியில் இருந்து விலகினாலும், வார்னரின் இதயத்தில் ஐதராபாத் எப்போதும் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications