சிட்னி: ஆஸ்திரேலியாவின் இளம் கிரிக்கெட் வீரர் ஹர்ஜாஸ் சிங், உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் நம்ப முடியாத வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் கிரிக்கெட் தொடரில், வெஸ்டர்ன் சப்அர்ப்ஸ் அணிக்காக ஆடிய அவர், வெறும் 141 பந்துகளில் 314 ரன்களைக் குவித்து கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
சிட்னி அணிக்கு எதிராக பிரட்டன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஹர்ஜாஸ் சிங் ரன் மழை பொழிந்தார். அவரது இந்த இமாலய இன்னிங்ஸில் 35 பிரம்மாண்ட சிக்ஸர்களும், 12 பவுண்டரிகளும் அடங்கும். அதாவது, 252 ரன்கள் பவுண்டரிகள் மூலமாக மட்டுமே வந்துள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் 2024-ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்த்து அதிகபட்ச ரன்கள் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது வீரராகக் களமிறங்கிய 20 வயதான ஹர்ஜாஸ் சிங், ஆட்டத்தின் தொடக்கத்தில் சில பந்துகளை நிதானமாக எதிர்கொண்டார். அதன்பிறகு அவர் நிகழ்த்தியது தான் உச்சகட்டம். மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்த அவர், 33 பந்துகளில் அரைசதத்தையும், 74 பந்துகளில் சதத்தையும் எட்டினார். ஆனால், சதத்திற்குப் பிறகுதான் உண்மையான ஆட்டமே தொடங்கியது.
அடுத்த 100 ரன்களை வெறும் 29 பந்துகளில் விளாசிய அவர், இரட்டைச் சதம் அடித்தார். தொடர்ந்து தனது அதிரடியைக் கைவிடாத அவர், 132 பந்துகளில் முச்சதத்தை எட்டி வரலாற்று சாதனை படைத்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில், மேலும் சில சிக்ஸர்களை விளாசும் முயற்சியில், 141 பந்துகளில் 314 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது இந்த அற்புதமான ஆட்டத்தால், வெஸ்டர்ன் சப்அர்ப்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 483 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை எட்டியது.

இந்தப் போட்டி அதிகாரப்பூர்வமான 'லிஸ்ட் ஏ' போட்டி இல்லை என்றாலும், ஹர்ஜாஸ் சிங்கின் இந்த ஸ்கோர், 'லிஸ்ட் ஏ' கிரிக்கெட்டில் இந்தியாவின் நாராயண் ஜெகதீசன் அடித்த 277 ரன்கள் என்ற உலக சாதனையை விட அதிகமாகும். மேலும், நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் கிரிக்கெட் வரலாற்றில், இது மூன்றாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும். விக்டர் டிரம்பர் (335) மற்றும் பில் ஜாக்ஸ் (321) ஆகியோர் மட்டுமே இவருக்கு முன்னால் உள்ளனர். தனது கிளப்பின் சாதனையான பாப் சிம்ப்சனின் 229 ரன்களையும் அவர் முறியடித்தார்.
தனது வரலாற்றுச் சாதனை குறித்துப் பேசிய ஹர்ஜாஸ் சிங், "சதம் அடித்த பிறகு, ஆட்டத்தின் வேகத்தை அதிகரிக்க நினைத்தேன். ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கு விளாசவே விரும்பினேன். எல்லாம் பேட்டின் நடுவில் பட்டது ஒரு நம்பமுடியாத உணர்வு" என்றார்.
போட்டிக்கு முன்பு தனது அம்மாவுடன் செய்துகொண்ட ஒரு வேடிக்கையான ஒப்பந்தத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார். "நேற்று அம்மாவிடம் கேட்டேன், 'நான் சதம் அடித்தால், உங்கள் காரை அடிக்கடி ஓட்ட அனுமதிப்பீர்களா?' என்று. அதற்கு அவர், 'வாயை மூடு' என்று சொல்லிவிட்டார். உண்மையில், இன்று சதம் அடித்ததே எனக்குப் போதும் என்றுதான் நினைத்தேன்" என்று சிரித்துக்கொண்டே குறிப்பிட்டார்.
இந்த அசுரத்தனமான ஆட்டத்தால் தனது பேட்டில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாகவும், ஆட்டம் முழுவதும் ஃபீல்டிங் செய்ததால் முதுகு வலி ஏற்பட்டதாகவும் ஹர்ஜாஸ் சிங் குறிப்பிட்டார். ஹர்ஜாஸ் சிங்கின் இந்த அசுரத்தனமான ஆட்டம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.