என்ன இப்படி இறங்கிட்டீங்க.. ரக்பி முதல் ரோலர் வரை.. இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியா விநோத பயிற்சி- ஏன்
டெல்லி: இந்திய அணியை 3வது டெஸ்ட் போட்டியிலாவது வீழ்த்தி விட வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் விநோதமான பயிற்சியை செய்து வருகின்றனர். இது இந்தியாவுக்கு அச்சுறுத்தலை தரலாம்.
விறுவிறுப்பாக நடந்து வரும் இந்தியா - ஆஸ்திரேலியா பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் சுவாரஸ்ய கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி கண்டு முன்னிலை பெற்றுள்ளது.
எனவே இன்னும் ஒரு வெற்றியை பெற்று தொடரை கைப்பற்றி விட வேண்டும் என இந்திய வீரர்களும், தோல்விகளுக்கு பதிலடி கொடுத்தே தீர வேண்டும் என ஆஸ்திரேலிய வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

3வது டெஸ்ட் போட்டி
இந்நிலையில் இதற்காக புதுவித முயற்சியை செய்துள்ளனர். 2வது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகும் ஆஸ்திரேலிய அணி இந்தூருக்கு புறப்படாமல் டெல்லியிலேயே தான் இருந்து பயிற்சி பெற்றனர். கடந்த போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் ஃபீல்டிங் சற்று சொதப்பலாக இருந்தது. குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித் ஸ்லிப் திசைகளில் கேட்ச்-களை விட்டார். இது ஒருபுறம் இருக்க, இந்தூர் களத்தில் கேட்ச் பிடிப்பது மிகப்பெரிய விஷயமாக இருக்கும்.

வித்தியாச பயிற்சிகள்
இந்தூர் மைதானத்தில் சிகப்பு மண் இருப்பதால் தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சுக்கு உதவும். அதுவும் மிட்செல் ஸ்டார் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரின் ஓவரில் நன்கு பவுன்ஸாகி கேட்ச்-கள் அதிகம் வரலாம். இதனை சமாளிப்பதற்காக பிட்ச் ரோலர்கள், இரும்பு அட்டைகள், ரக்ஃபி பந்துகளை பயன்படுத்தி விநோத முறையில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

என்ன காரணம்
அதாவது போட்டியின் போது பந்து எந்த வேகத்தில் வேண்டுமானாலும் கேட்ச்-க்கு வரலாம். உயரமாகவும் இருக்கும், கீழாகவும் வரும். எனவே மேற்கண்ட பொருட்களை பயன்படுத்தி கடினமான கேட்ச் பயிற்சிகளை பெற்றால், போட்டியின் போது எப்படிப்பட்ட கேட்ச்-ஐயும் தவறவிடாமல் பிடித்துவிடலாம். ஃபீல்டிங் மூலம் அழுத்தத்தை கொடுத்தாலே பேட்ஸ்மேன்கள் தடுமாறலாம்.

ஆஸி-க்கு கட்டாயம்
இது ஒருபுறம் இருக்க, மீதமுள்ள 2 டெஸ்ட்களில் ஏதேனும் ஒன்றில் வெற்றி மற்றும் ஒன்றில் சமன் செய்தால் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு நல்லது. ஏனென்றால் இந்தியா இன்னும் ஒரு வெற்றி பெற்றால் கூட டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். ஏற்கனவே முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் பலமான இந்தியாவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதுவே இந்தியா வரவில்லை என்றால் இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணியை தான் எதிர்கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications