
ஆல் ரவுண்டர் அஜித் அகர்கர்
இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர், ஆல் ரவுண்டராகவும் இருந்தார். சில போட்டிகளில் அவரது அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு உதவி செய்துள்ளது. சில சமயம் அவர் பேட்டிங்கில் மோசமாகவும் ஆடி உள்ளார். கடைசியாக அவர் ஆடிய போட்டிகளில் ரன் குவிக்கவில்லை.

லார்ட்ஸ் டெஸ்ட் சதம்
புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தால் அந்த மைதானத்தில் இருக்கும் கௌரவ வீரர்கள் பட்டியலில் இடம் பெற முடியும். அந்த சாதனையை செய்துள்ளார் அஜித் அகர்கர். மாபெரும் ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் பலர் கூட செய்ய முடியாத சாதனை இது.

109 நாட் அவுட்
2002 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் 109 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் அஜித் அகர்கர். அவரது ஆட்டத்தால் அப்போது இந்தியா தோல்வியில் இருந்து தப்பியது.

ஒருநாள் போட்டி ஆட்டம்
அதே போல, ஒருநாள் போட்டிகளில் மூன்று அரைசதம் அடித்துள்ளார். அதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2002ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூர் போட்டியில் 102 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தும் அடக்கம். ஓரளவு பேட்டிங் ஆடத் தெரிந்த பந்துவீச்சாளராகவே இருந்தார் அகர்கர்.

7 டக் அவுட்
ஆனால், 1999இல் ஒரு மோசமான சாதனையை செய்தார். தொடர்ந்து ஏழு போட்டிகளில் டக் அவுட் ஆனார். அதில் ஐந்து டக் அவுட்கள் ஆஸ்திரேலிய தொடரில் வந்தது. அதை அடுத்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் அப்போது முதல் அஜித் அகர்கரை டக் அவுட் வீரர் என கிண்டல் செய்து வந்தன.

பட்டியலில் அஜித் அகர்கர்
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டிகளை நேரலையில் ஒளிபரப்பும் ஃபாக்ஸ் கிரிக்கெட் மோசமான பின்வரிசை பேட்ஸ்மேன்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் இடம் பெற்றுள்ளார் அஜித் அகர்கர். அது தான் விமர்சனத்தை உண்டாக்கி உள்ளது.

அந்த பேட்ஸ்மேன் பட்டியல்
அந்த மோசமான பேட்ஸ்மேன்கள் பட்டியல் - கிறிஸ் மார்டின் (நியூசிலாந்து), கர்ட்னி வால்ஷ் (வெ.இண்டீஸ்), கிளேன் மெக்கிராத் (ஆஸ்திரேலியா), மான்டி பனேசர் (இங்கிலாந்து), அஜித் அகர்கர் (இந்தியா), பும்ரா (இந்தியா), பில் டப்னேல் (இங்கிலாந்து), ப்ரூஸ் ரெய்டு (ஆஸ்திரேலியா), டெவான் மால்கம் (இங்கிலாந்து), ஹென்றி ஒலோங்கா (ஜிம்பாப்வே), பொம்மி எம்பாங்க்வா (ஜிம்பாப்வே)

21 பந்து அரைசதம்
இந்த பட்டியலை ட்விட்டரில் பதிவு செய்துள்ளது ஃபாக்ஸ் கிரிக்கெட். அதன் கீழ் பலரும் விமர்சனத்தை முன் வைத்துள்ளனர். கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே கூறுகையில், அஜித் அகர்கர் ஒரு டெஸ்ட் சதம் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 21 பந்துகளில் 50 ரன்கள் அடித்து இருக்கிறார் என குறிப்பிட்டு தன் வியப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

ஆய்வு செய்யவும்
ஒருவர் எப்படி அகர்கரை இந்தப் பட்டியலில் சேர்த்தீர்கள்? அவரை இந்த பட்டியலில் இருந்து நீக்க அதிக ஆய்வுகள் கூட உங்களுக்கு தேவை இல்லை. கூகுள் அல்லது கிரிக்கெட் இணையதளங்களில் அவரை தேடினாலே போதும் என கூறி உள்ளார்.

சராசரி தெரியுமா?
மற்றும் ஒருவர் இந்த பட்டியலில் அஜித் அகர்கரா? நீங்கள் ஆஸ்திரேலியாவை தாண்டியும் கிரிக்கெட் பார்க்க வேண்டும். அவர் முதல் தர போட்டிகளில் பேட்டிங் சராசரி 29 வைத்துள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு டெஸ்ட் சதம் அடித்துள்ளார்.

பாண்டிங் பெயரை சேருங்க மற்றொருவர்
ஆஸ்திரேலிய பேட்டிங் ஜாம்பவான் பாண்டிங்கை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம் எனக் கூறி அஜித் அகர்கர் - பாண்டிங் ஒப்பீட்டை முன் வைத்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் அகர்கர் 6 இன்னிங்க்ஸ்களில் 19 ரன்கள் எடுத்ததற்காக இதில் சேர்க்கிறீர்கள் என்றால், 2000-01 இந்திய டெஸ்ட் தொடரில் பாண்டிங் 5 இன்னிங்க்ஸ்களில் 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும், லார்ட்ஸ் மைதானத்தில் பாண்டிங்கை விட அதிக முறை கௌரவ பட்டியலில் அகர்கர் இடம் பெற்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார் அந்த நபர்.


Click it and Unblock the Notifications











