கேப்டன் பதவியை விட்டெல்லாம் போக மாட்டேன்.. ரகசிய திட்டம் போட்டு ஆதரவை திரட்டிய பாபர் அசாம்
கொல்கத்தா : பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், உலகக்கோப்பை தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து விலகுவர் என தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு நேர்மாறாக ரகசிய திட்டத்தை தீட்டி இருக்கிறார்.
2023 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் ஒன்பது போட்டிகளில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று அரை இறுதி வாய்ப்பை தவற விட்டது. அந்த அணியின் தோல்விகள் மட்டுமின்றி மொத்தமாக அணியின் செயல்பாடு சரியில்லை என கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

கேப்டன் பாபர் அசாமின் தலைமையும் சரியில்லை என முன்னாள் வீரர்கள் பலர் கூறி உள்ளனர். மேலும், கேப்டன் சுமையை இறக்கி வைத்து விட்டு பாபர் அசாம் தன் பேட்டிங்கில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டு வந்த நிலையில், அவர் உலகக்கோப்பை லீக் சுற்றின் முடிவில் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், போட்டி முடிந்த உடன் பேசிய பாபர் அசாம், தான் அணியை வழிநடத்த தயாராக இருப்பதாகவும், அணியை மறு சீரமைக்க உதவவும் தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார். அதன் மூலம் தான் கேப்டன் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என மறைமுகமாக கூறி இருக்கிறார். இந்த அறிவிப்புக்கு பின் ரகிசய திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டிக்கு முன் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் தலைவருமான ரமிஸ் ராஜாவை சந்தித்து பேசினார் பாபர் அசாம். அப்போது அவர் கேப்டன்சியை பற்றி பேசியதாக கூறப்படுகிறது. மேலும், சக வீரர்களை அழைத்து கேப்டன் பதவியை தொடர்ந்தால் ஆதரவு அளிப்பீர்களா? என கேட்டு இருக்கிறார் பாபர். பலரும் அவர் கேப்டன் பதவியில் தொடர ஆதரவு அளித்து இருக்கின்றனர்.
அந்த நம்பிக்கையில் பாபர் அசாம் போட்டி முடிந்த உடன் தான் கேப்டனாக தொடர இருப்பதாக கூறி இருக்கிறார். ஆனால், இந்த விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு எடுக்கும் முடிவே கடைசி முடிவாக இருக்கும்.


Click it and Unblock the Notifications