பாபர் அசாமுக்கு மனநலப் பிரச்சனை? காரணமே இதுதான்.. முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் பேச்சு
கராச்சி: பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கடந்த ஓராண்டாக மோசமாக பேட்டிங் செய்து வருகிறார். எந்த ஒரு பெரிய அணிக்கும் எதிராக அவர் இந்த ஓராண்டில் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. அவரது பேட்டிங்கில் தடுமாற்றம் இருக்கிறது. அவர் ஒவ்வொரு பந்தையும் பவுண்டரிற்கு அடிக்க முயல்கிறார்.
அதனால், பாபர் அசாம் ஃபார்ம் அவுட் ஆகிவிட்டதாகவும், அவரது பேட்டிங் நுட்பங்கள் வேலை செய்யவில்லை எனவும் ஒரு பக்கம் விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால், இது குறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரசீத் லத்தீப் அவருக்கு மனதில் தான் பிரச்சனை என கூறி இருக்கிறார். கடந்த 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி மோசமாக செயல்பட்டதால் பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார்.

அடுத்த சில மாதங்களில் அவர் மீண்டும் பாகிஸ்தான் ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அப்படி அவரை நீக்கிவிட்டு மீண்டும் கேப்டன் ஆக்கியது தான் அவருக்கு பிரச்சனையாக மாறி உள்ளது என ரஷீத் லத்தீப் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இது பற்றி பேசுகையில், "பாபர் அசாமுக்கு நிறைய மனநல பிரச்சனைகள் வந்து விட்டது. நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். பாபர் அசாம் வலுக்கட்டாயமாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். மனம் சரியாக வேலை செய்யவில்லை என்றால் நரம்பு மண்டலம் சரியாக வேலை செய்யாது. அதனால்தான் அவர் ஒவ்வொரு பந்தையும் வேகமாக அடிக்க முயல்கிறார்." என்றார் ரஷீத்.
மேலும், "அவர் கேப்டன் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு தன் மீது மட்டும் கவனம் செலுத்தி மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். அவரது பேட்டிங் பிரச்சனைக்கு காரணம் அவரது நுட்பம் என்பதை விட மனநலம் சார்ந்த அழுத்தம் என்பதே எனது கருத்து. அவர் அதிக அளவிலான மன அழுத்தத்தில் இருக்கிறார் என்பதும் உண்மை." என்று ரஷீத் லத்தீப் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications