பாபர் அசாம் காயம்.. பயிற்சி போட்டியில் பந்து தாக்கி வலியால் துடித்தார்.. இங்கி. தொடரில் பின்னடைவு
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில், பயிற்சிப் போட்டியின் போது பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புரொஃபெஷனல் கவுண்டி கிளப் செலக்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின் போது பாபர் அசாம் ஐந்து ரன்கள் எடுத்திருந்த வேளையில், இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்டோர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேனி லம்ஸ்டன் வீசிய பந்து அவரது கையில் பலமாகத் தாக்கியது. இதனால் வலியால் துடித்த பாபர் அசாம், உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர் மீண்டும் பேட்டிங் செய்ய களம் இறங்கவில்லை.

பாபர் அசாமின் காயத்தின் உடற்தகுதி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அணியின் மருத்துவர் பாபர் அசாமை பரிசோதித்த பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஞ்சிய பயிற்சிப் போட்டியில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "ஆகஸ்ட் 17, திங்கட்கிழமை அன்று ஹெடிங்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பாகிஸ்தான் அணியின் பயிற்சி அமர்வில் பாபர் அசாம் பங்கேற்பார்" என்றும் பிசிபி தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையில் பாபர் அசாம் மிக முக்கிய பங்கு வகிப்பதால், அவரது உடற்தகுதி உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், கேப்டனின் காயம் குறித்த கவலை பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 19 அன்று தொடங்குகிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து 24.36 சதவீத புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், பாகிஸ்தான் 22.22 சதவீத புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் உள்ளன.மறுபுறம், காயத்தில் இருந்து குணமடைந்து ஷான் மசூத் அணிக்குத் திரும்பியிருப்பது பாகிஸ்தான் அணிக்கு சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் டெஸ்ட் அணி: பாபர் அசாம் (கேப்டன்), ஆமிர் ஜமால், அப்துல்லா ஷபிக், அலி உஸ்மான், அசான் அவாய்ஸ், இமாம்-உல்-ஹக், குர்ரம் ஷாசாத், முகமது அப்பாஸ், முகமது அலி, முகமது ரிஸ்வான், முகமது அவாய்ஸ் ஜாபர், முகமது காசி கோரி, சாஜித் கான், சல்மான் அலி ஆகா, சவுத் ஷகீல், ஷான் மசூத், உபைத் ஷா.


Click it and Unblock the Notifications

