மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாகின் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் உள்ளிட்டோரின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சோயப் அக்தரின் யூட்யூப் சேனலுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஜம்மு - காஷ்மீரின் முக்கிய சுற்றுலா நகரமான பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் கூடிய சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் சரமாரியாக நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

இதன்பின் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவித்தது. இதனால் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்த ஏராளமான பாகிஸ்தான் மக்கள் சிக்கலில் தவித்து வருகின்றனர். அதேபோல் பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் பொருளாதார ரீதியிலான தடைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூட்யூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர், நடிகைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஹனியா அமிர், மஹிரா கான் உள்ளிட்ட பிரபலங்களில் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
அவர்களை பின் தொடர்ந்து வந்த இந்தியர்களால், அவர்களின் சோசியல் மீடியா கணக்குகளை பார்க்க முடியவில்லை. தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் சோசியல் மீடியா கணக்குகளும் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாகீன் அப்ரிடி உள்ளிட்டோரின் கணக்குகளை பார்க்க முடியவில்லை.
அவர்களின் கணக்குகளுக்கு சென்றால், கரும்புகைப்படமே உள்ளது. இதுமட்டுமல்லாமல் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற அர்ஷத் நதீமின் இன்ஸ்டாகிராம் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சோயப் அக்தரின் யூட்யூப் சேனல் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் வீரர்களின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.