சீனியர்களுக்கு மதிப்பளியுங்கள்.. ரிஸ்வானுக்கு நிச்சயம் ஓய்வு தேவை.. பாபர் அசாமிற்கு அப்ரிடி அட்வைஸ்!
முல்டான்: பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சீனியர் வீரர்களின் ஆலோசனைகளை கேட்பதில்லை என்று முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி விமர்சித்துள்ளார்.
17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.
அதேபோல் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் டெஸ்ட் தொடரை இழந்து ரசிகர்களை ஏமாற்றியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த தோல்வி காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் முன்னேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தோல்விக்கு காரணம் என்ன?
இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்த பிட்ச்-ன் தன்மையே காரணம் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஃபிளாட் பிட்ச்களையும், பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி செய்யாத சுழல் பிட்ச்களையும் தயார் செய்ததே பாகிஸ்தான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. பாகிஸ்தான் அணியின் மோசமான அணுகுமுறையே தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

அப்ரிடி விமர்சனம்
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு கேப்டன் பாபர் அசாமை முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ஷாகித் அப்ரிடி கூறுகையில், ஒரு நல்ல கேப்டன் என்பவர் அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைப்பதில் தான் வெளிப்படுவார். ஒருங்கிணைப்பு என்றால், முன்னாள் வீரர்கள், சீனியர்களுடன் திட்டங்கள் பற்றி ஆலோசனை செய்ய வேண்டும்.

ரிஸ்வானுக்கு ஓய்வு தேவை
இதனை விடுத்து வெளியில் இருப்பவர்களிடம் இருந்து ஆலோசனை பெற்றால், நிச்சயம் பிரச்சினை வரும். பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் யூசுப், தனக்கும் அணித் தேர்வுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறுகிறார். பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ரிஸ்வானுக்கு நிச்சயம் ஓய்வு தேவை. அதனால் பாகிஸ்தான் அணி சர்ஃபராஸ் அஹ்மத்தை தேர்வு செய்ய வேண்டும்.

கேப்டனாக தடுமாற்றம்
பாகிஸ்தான் அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும். எல்லோருக்கும் மோசமான ஆட்டம் எப்போது வேண்டுமானாலும் வரும். ஆனால் பாபர் அசாம் இந்த தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். கேப்டனாக மட்டுமே தடுமாறி வருகிறார். அதேபோல் ஆறுதல் வெற்றியை பெறுவதில் கவனம் கொள்ளாமல், எங்கு தவறு நடக்கிறது, எதனை சரி செய்ய வேண்டும் என்பதில் அணி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications