பாபர் அசாமா இந்த காரியத்தை செய்தது? பாகிஸ்தான் மக்களாலேயே நம்ப முடியலையே.. ஃபார்முக்கு வந்தார்!
கராச்சி: பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் குவெட்டா அணிக்கு எதிரான ஆட்டத்தில், கடைசி ஓவரின் கடைசி பந்தில் மின்னல் வேகத்தில் ஓடி டைவ் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்து மைதானத்தையே அதிர வைத்துள்ளார் பெஷாவர் அணி கேப்டன் பாபர் அசாம். டி20 போட்டிகளுக்கு அவர் சரிப்பட்டு வரமாட்டார் என விமர்சித்தவர்களுக்கு, 192.31 என்ற அசுரத்தனமான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி பதிலடி கொடுத்துள்ளார்.
இது பாபர் அசாம் தானா? என பாகிஸ்தான் மக்களே மிரளும் அளவுக்கு ஒரு ஆட்டத்தை ஆடி இருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாகவே கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக ரன் குவிப்பார், பெரிய அணிகளுடன் சொதப்புவார் டி20 போட்டிகளில் ஆமை வேகத்தில் ரன் சேர்த்து சொந்த அணிக்கு அழுத்தம் கொடுப்பார் என்ற பெயரை பெற்று இருந்தார் பாபர் அசாம். ஆனால், 2026 பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் தனது ஃபார்மை மீட்டு எடுத்து இருக்கிறார்.

கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் போட்டியில் பெஷாவர் சால்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய பாபர் அசாம் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். வழக்கமான தனது நிதான ஆட்டத்தை முழுமையாகக் கைவிட்டு, பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 52 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் குவித்து மிரள வைத்தார். அவரது இந்த அதிரடி இன்னிங்ஸில் 6 பவுண்டரிகளும் 4 இமாலய சிக்சர்களும் அடங்கும்.
முதல் இன்னிங்க்ஸின் கடைசி ஓவரை குவெட்டா அணியின் ஜஹான்டாத் கான் வீசினார். பெஷாவர் இன்னிங்ஸின் கடைசி பந்தில் பாபர் அசாம் சதமடிக்க சரியாக 2 ரன்கள் தேவைப்பட்டது. பந்தை அடித்துவிட்டு மின்னல் வேகத்தில் ஓடிய அவர், ரன் அவுட்டாவதில் இருந்து தப்பிக்க முழு நீளத்திற்கு டைவ் அடித்து தனது சதத்தை வெற்றிகரமாகப் பதிவு செய்தார். அவருக்கு மிகவும் உறுதுணையாக ஆடிய குசல் மெண்டிஸ் 44 பந்துகளில் 83 ரன்கள் விளாசினார். இவர்கள் இருவரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 75 பந்துகளில் 135 ரன்கள் குவித்து எதிரணியை நிலைகுலையச் செய்தனர்.
இந்த சதம் மூலம் பாபர் அசாம் பல வரலாற்று சாதனைகளை சமன் செய்துள்ளார். இது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் அவர் அடிக்கும் 3வது சதமாகும். இதன் மூலம் இந்தத் தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மேலும், ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் இது பாபரின் 12வது சதமாகும். டி20 போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் 22 சதங்களுடன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் மட்டுமே அவருக்கு முன்னால் முதலிடத்தில் உள்ளார். டேவிட் வார்னர் 10 சதங்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.
நடப்பு 2026 தொடரில் தொடர்ந்து ரன் குவித்து வரும் பாபர் அசாம், இதுவரை 7 இன்னிங்ஸ்களில் விளையாடி 401 ரன்களைக் குவித்துள்ளார். இந்த சதத்திற்குப் பிறகு அவரது பேட்டிங் சராசரி 100.25 ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது. டி20 போட்டிகளில் தன்னால் அதிரடியாக ரன் குவிக்க முடியும் என்பதை நீண்ட காலத்திற்கு பின் பாபர் அசாம் நிரூபித்துள்ளார்.


Click it and Unblock the Notifications