
கண்ணீர் விட்ட ஸ்மித்
2014 நவம்பர் மாதம், ஆஸ்திரேலிய வீரர் ஃபிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து அடிப்பட்டு இறந்ததற்காக, கேப்டன் மைக்கேல் கிளார்க், செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதார். அதன் பின் நான்கு வருடங்கள் கழித்து, கடந்த 2018ம் ஆண்டு மீண்டும் ஒரு ஆஸ்திரேலிய கேப்டன் செய்திளார்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதார். அவர் ஸ்டீவன் ஸ்மித். ஆனால், அப்போது யாரும் இறக்கவில்லை. ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் மீதான கெளரவம் குலைந்து போனது. 2018ல் கேப்டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட், தான் மறைத்து வைத்திருந்த மர்மப் பொருள் கொண்டு, ஆஸ்திரேலிய பவுலர்கள் ஸ்விங் செய்வதற்கு ஏற்றார் போல் பந்தை சேதப்படுத்தினர். இதை அப்படியே கேமரா படம் பிடிக்க, "What the f*** is going on? Find out what the f*** is going on?" என்று பயிற்சியாளர் லீமன் ஆத்திரப்பட, போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிர்ச்சிக்கு ஆளானர்கள்.

விளையாட தடை
அதன்பின், துணை கேப்டன் வார்னரின் ஐடியாவோடு, கேப்டன் ஸ்மித்தின் துணையோடு பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது உறுதியானது. ஸ்மித்துக்கும், வார்னருக்கும் ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்க, சீனியர்கள் தவறு செய்ய சொன்னதை ஒப்புக்கொண்டு செய்த இளம் வீரர் பேன்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு இந்த சம்பவம் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது.

சான்றாகும் புகைப்படங்கள்
இப்போது அப்படியொரு சம்பவம் மீண்டும் இங்கிலாந்து கிரிக்கெட்டில் அரங்கேறுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆம்! இங்கிலாந்து வீரர்கள் Ball Tampering-ல் ஈடுபட்டுள்ளார்களோ என்ற சந்தேகத்தை போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வலுப்படுத்துகின்றன. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இன்னிங்ஸில் இந்தியா 364 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து 391 ரன்கள் சேர்த்தது. இதனால், இந்தியாவை விட அந்த அணி முதல் இன்னிங்ஸில் 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

154 ரன்கள் முன்னிலை
இந்த நிலையில், நேற்று (ஆக.15) நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில், இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இதில் நேற்றைய ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. அஜின்க்யா ரஹானே 61 ரன்களும், புஜாரா 45 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி 20 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். தற்போது ரிஷப் பண்ட் 14 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 154 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

ஐசிசி நடவடிக்கை?
இந்நிலையில், நேற்று நான்காம் நாள் ஆட்டத்தின் இரண்டாவது செஷனின் போது, இங்கிலாந்து வீரர்கள் பந்தை தரையில் போட்டு ஷூக்களால் பந்தை சேதப்படுத்துவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா உள்ளிட்ட பலர், இந்த புகைப்படங்களை வெளியிட்டு, இங்கிலாந்து வீரர்கள் "Ball Tampering" செய்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பி ட்வீட் செய்துள்ளனர். ரஹானேவும், புஜாராவும் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த போது தான், பந்தை சேதப்படுத்தும் விதமாக இங்கிலாந்து வீரர்களாக செயல்பட்டதாக ரசிகர்கள் சமூக தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து ஐசிசி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications