ஆஸ்திரேலிய கேப்டனை அவமானப்படுத்தி அனுப்பிய வங்கதேச பவுலர்.. படுதோல்விக்கு முன் நடந்த மோதல்
டாக்கா: வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் உள்ள மிர்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்கதேசம், 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மாபெரும் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த படுதோல்விக்கு மத்தியில் ஆஸ்திரேலிய கேப்டனும், வங்கதேச வேகப்பந்து வீச்சாளரும் மைதானத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மொசாடெக் ஹொசைன் சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் சேர்த்தார். மேலும் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 67 ரன்களும், தன்ஸித் ஹசன் 54 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய வீரர்கள் பீல்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு பல முக்கிய கேட்சுகளை தவறவிட்டது வங்கதேச அணிக்கு சாதகமாக அமைந்தது.

இதையடுத்து 285 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடியது. தொடக்கம் முதலே வங்கதேச அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நஹித் ராணா மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை மிரட்டினார். ஆட்டத்தின் 11வது ஓவரில் ஆஸ்திரேலிய கேப்டன் ஜோஷ் இங்கிலிஸ் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ராணாவின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அப்போது விக்கெட் வீழ்த்திய உற்சாகத்தில் இருந்த ராணா, பெவிலியன் நோக்கித் திரும்பிய கேப்டன் ஜோஷ் இங்கிலிஸின் முகத்திற்கு நேராக சென்று மிகவும் ஆக்ரோஷமாக கத்தி கொண்டாடினார். அவரை அவமானப்படுத்தும் விதமாக ராணா நடந்து கொண்டதால் ஆத்திரமடைந்த இங்கிலிஸ், மீண்டும் திரும்பி வந்து ராணாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு நேருக்கு நேர் மோதும் சூழல் மைதானத்தில் உருவானது. உடனடியாக ஓடிவந்த வங்கதேச கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் இருவரையும் விலக்கி விட்டு சமாதானம் செய்தார். கள நடுவரும் பவுலர் ராணாவை கடுமையாக எச்சரித்தார்.
இந்த மோதலுக்குப் பின் ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீட்டுகட்டு போல் சரிந்தது. குறிப்பாக ராணா 41 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். ஆஸ்திரேலிய அணி 42.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்திருந்தபோது பலத்த மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வங்கதேசம் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை ஒருநாள் போட்டியில் வங்கதேசம் வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும். ஆஸ்திரேலிய அணியின் இந்த மோசமான சாதனை மற்றும் மைதானத்தில் நடந்த மோதல் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
