இதுதான்டா கிரிக்கெட்.. மேத்யூஸை வம்புக்கு இழுத்த வங்கதேசம்.. ஹெல்மெட்டை வைத்து ரஹீம் செய்த காமெடி!
சாட்டோகிராம் : இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றுள்ள நிலையில், அனுபவ வீரர் மேத்யூஸ் டைம் அவுட்டின் போது எப்படி நடந்து கொண்டார் என்பதை ஹெல்மெட்டை வைத்து செய்து காட்டி வங்கதேச அணி கிண்டல் செய்துள்ளது.
உலகக்கோப்பை தொடரின் போது வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இலங்கை அணியின் சீனியர் வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் க்ரீஸிற்கு தாமதமாக வந்ததாக கூறி, வங்கதேச அணி வீரர்கள் டைம் அவுட் கோரி நடுவரிடம் முறையிட்டனர். ஆனால் க்ரீஸிற்கு நேரத்தில் வந்த மேத்யூஸ், ஹெல்மெட் சேதமடைந்ததன் காரணமாகவே தாமதம் செய்தார்.

அந்த நேரத்தில் சேதமடைந்த ஹெல்மெட்டை எடுத்து வங்கதேச அணியின் ஒவ்வொரு வீரரிடம் காட்டி மேத்யூஸ் விளக்கம் கொடுத்தார். ஆனாலும் வங்கதேச அணி வீரர்கள் டைம் அவுட் முறையீட்டை திரும்ப பெறவில்லை. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட் வாயிலாக ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற மோசமான சாதனையை மேத்யூஸ் படைத்தார்.
இதனைத் தொடர்ந்து அண்மையில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை இலங்கை அணி வென்றது. அப்போது இலங்கை அணி வீரர்கள் அனைவரும் தங்களது கைகளில் வாட்ச் இருப்பதை போல் செய்து காட்டி, வங்கதேச அணிக்கு பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 235 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ஜனித் லியாங்கே 101 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். வங்கதேச அணி தரப்பில் டஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பின் களமிறங்கிய வங்கதேச அணி 40.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரை வங்கதேச அணி அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றிக்கு பின் வங்கதேச அணியின் ஹாண்டோ கோப்பையை வாங்கிவிட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்து வந்தார். அப்போது வங்கதேச அனுபவ வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம், ஒரு ஹெல்மெட்டை எடுத்து வங்கதேச அணியின் ஒவ்வொரு வீரர்களிடம் சென்று காட்டினார். இதன் மூலமாக டைம் அவுட் சூழலின் போது மேத்யூஸ் எப்படி நடந்து கொண்டாரோ, அதனை நினைவூட்டி ரஹீம் கிண்டல் செய்தார். இந்த வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications