மழையால் கெட்டது முதல் ஒருநாள் போட்டி
பெங்களூர்:
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. முன்னதாக விளையாடிய ஆஸ்திரேலியா அதிரடியாக ஆடி 307 ரன்களைக் குவித்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான 7 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நேற்று பெங்களூரில் தொடங்கியது.பகலிரவுப் போட்டியான இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கில்கிறைஸ்ட், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதிரடி நாயகன் கில்கிறைஸ்ட் பிக்கப் ஆகி பிரித்து மேயத் தொடங்கிய நிலையில், எதிர்பாராதவிதமாக ஜாகிர்கான் பந்தில் யுவராஜிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அவருக்கு அடுத்து இறங்கிய ஹாட்ஜ் ரன் ஏதும் எடுக்காமல் வீழ்ந்தார். மறு முனையில் வேகம் பிடிக்க ஆரம்பித்திருந்த மாத்யூ ஹெய்டனும் 34 ரன்களில் வெளியேறினார்.
ஆஸ்திரேலியத் தரப்பில் உரிய இடைவெளியில் விக்கெட்டுக்கள் விழுந்து வந்ததால், இந்தியத் தரப்பு நிம்மதி அடைந்தது. ஆனால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களுக்கு 101 ரன்கள் என்ற கஷ்டமான நிலையில் இருந்த ஆஸ்திரேலியா, மைக்கேல் கிளார்க்கின் ஆட்டத்திற்குப் பிறகு மின்னல் வேகத்தில் ரன குவிக்க ஆரம்பித்தது.
முன்னணி வீரர்களான கில்கிறைஸ்ட், ஹெய்டன், சைமண்ட்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையிலும் கூட இளம் வீரர் மைக்கே கிளார்க்கும், ஹாடினும் இணைந்து இந்தியப் பந்து வீச்சைப் பதம் பார்த்தனர்.
குறிப்பாக கிளார்க்கின் ஆட்டத்தில் அணல் பறந்தது. வந்த பந்துகளையெல்லாம் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் திருப்பி விட்டு ரன்களைக் குவித்தார்.
குறிப்பாக ஆர்.பி.சிங், ரமேஷ் பவார், ஜாகிர்கான் ஆகியோரது பந்து வீச்சுக்களை ஒன்றுமில்லாமல் செய்து விட்டார் கிளார்க். அவருக்கு இணையாக ஹாடினும் சிறப்பாக விளையாடினார்.
இருவரும் இணைந்து ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை வெகு வேகமாக மேலே உயர்த்தினர். சிறப்பாக ஆடிய ஹாடின் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் ஹோப்ஸ், கிளார்க்குடன் இணைந்தார். அவரும் தனது பங்குக்கு அதிரடியாக ஆடினார்.
சிறப்பாக ஆடி வந்த கிளார்க் இன்னிங்ஸின் கடைசிப் பந்தில் ரன் அவுட் ஆனார். 132 பந்துகளைச் சந்தித்த கிளார்க் 130 ரன்களைக் குவித்தார். ஒரு நாள் போட்டிகளில் அவர் எடுத்த அதிகபட்ச ரன் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்த ஆஸ்திரேலியா 307 ரன்களை எடுத்தது. இந்தியத் தரப்பில் ஸ்ரீசாந்த் மட்டுமே சிறப்பாக பந்து வீசினார். 55 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் ஸ்ரீசாந்த்.
10 ஓவர்களை வீசிய ஆர்.பி.சிங் 67 ரன்களை வாரிக் கொடுத்து, ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்தவில்லை. அதேபோல ரமேஷ் பவாரையும் ஆஸ்திரேலியர்கள் பிரித்து எடுத்து விட்டனர். 6 ஓவர்களை வீசிய அவர் 50 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஒரு விக்கெட்டையும் வீழ்த்தவில்லை.
பந்து வீச்சாளர்களை மாற்றி மாற்றி டோணி பயன்படுத்தியும் கூட ஆஸ்திரேலியாவின் வேகத்தைக் குறைக்க முடியவில்லை.
இத்தனைக்கும் முன்னணி வீரர்கள் எல்லாம் இல்லாத நிலையிலேயே ஆஸ்திரேலியா 300க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்ததால் இந்தியாவுக்கு மலைப்பான இலக்காக அது மாறியது.
இந்த நிலையில் இந்தியா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. டெண்டுல்கரும், காம்பீரும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
இந்திய அணிக்கு எடுத்த எடுப்பிலேயே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. டெண்டுல்கர் ரன் ஏதும் எடுக்காத நிலையில் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அவர் திரும்பிய சில நிமிடங்களிலேயே மழை கொட்டத் தொடங்கியது.
இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது, காம்பிர் 4 ரன்களுடனும், இர்பான் பதான் ரன் ஏதும் எடுக்காத நிலையிலும் இருந்தனர்.
மழை தொடர்ந்து பெய்ததால், கிட்டத்தட்ட 3 மணி நேரங்களுக்கு ஆட்டம் தடைபட்டது. மழை நின்ற பிறகு நடுவர்கள் ஸ்டீவ் பக்னரும், சுரேஷ் சாஸ்திரியும் மைதானத்தை ஆய்வு செய்தனர். இரு அணிகளின் கேப்டன்களுடனும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இறுதியில் மைதானம் ஈரத்தன்மையுடன் இருந்ததாலும், தொடர்ந்து ஆட முடியாத அளவுக்கு மைதானம் இருந்ததாலும், ஆட்டத்தைக் கைவிட நடுவர்கள் தீர்மானித்தனர்.
இதனால் இந்தியாவின் பதிலடியைக் காண காத்திருந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். அடுத்த போட்டி கொச்சியில் நடைபெறுகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications