டாக்கா: வங்கதேச கிரிக்கெட் வாரிய இயக்குநர் எம். நஸ்முல் இஸ்லாம், வீரர்களை அவமதிக்கும் வகையில் பேசியதால், அனைத்துப் போட்டிகளையும் புறக்கணிக்க உள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் இரண்டு பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) போட்டிகள் பாதிக்கப்படலாம். நிதிக்குழுத் தலைவர் நஸ்முல், BCB வீரர்களுக்காகச் செலவிடும் "கோடிக்கணக்கான பணத்தை அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டும் என புதன்கிழமை கருத்து தெரிவித்திருந்தார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் நலச்சங்கத்தின் (CWAB) தலைவர் முகமது மிதுன், BCB தலைமையகத்தில் நஸ்முலின் செய்தியாளர் சந்திப்பு முடிந்த சில மணிநேரங்களில் இந்தப் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்தார். "BCB இயக்குநர் [நஸ்முல் இஸ்லாம்] வெளியிட்ட கருத்து கிரிக்கெட் சமூகத்தை பெரிதும் புண்படுத்தியுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது," என்று மிதுன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும், "அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். நாளை போட்டிகளுக்கு முன் அவர் ராஜினாமா செய்யாவிட்டால், நாளை (வியாழக்கிழமை) BPL போட்டிகளில் தொடங்கி, அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் புறக்கணிப்பதாக அறிவிப்போம்," என்றார். ஜனவரி 15 அன்று இரண்டு BPL போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
ராஜ்ஷாஹி வாரியர்ஸ் தலைவர் நஸ்முல் ஹொசைன் ஷாண்டோ, சில்ஹெட் டைட்டன்ஸ் தலைவர் மெஹிடி ஹசன் மிராஜ், சட்டோகிராம் ராயல்ஸ் தலைவர் மஹேதி ஹசன், டாக்காவின் கேபிடல்ஸ் தலைவர் முகமது மிதுன் மற்றும் நோகாலி பயிற்சியாளர் காலித் மஹ்மூத் ஆகியோர் இந்தப் புறக்கணிப்பு முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு கவலைகளைக் காரணம் காட்டி இந்தியாவில் விளையாடக் கூடாது என்பதில் BCB உறுதியாக உள்ளது. இந்த ICC தொடர் இலங்கையுடன் இணைந்து நடத்தப்படுகிறது.
முஸ்தஃபிஜூர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து நீக்க BCCI அறிவுறுத்திய பின்னரே BCB இந்த முடிவை எடுத்தது. T20 உலகக் கோப்பையில் பங்களாதேஷ் விளையாடாவிட்டால் ஏற்படும் நிதிப் பாதிப்புகள் குறித்து நஸ்முலிடம் கேட்டபோது, வாரியத்திற்கு பாதிப்பில்லை, வீரர்களுக்கு மட்டுமே பாதிப்பு என்றும், இழப்பீடு கிடைக்காது என்றும் பதிலளித்தார்.
அவர், "ஏன் [இழப்பீடு] இருக்க வேண்டும்? நாங்கள் உங்களுக்காக கோடிக்கணக்கான டாக்காவை செலவழிக்கிறோம் என்று கேட்கிறோமா? முதலில் எனக்குப் பதில் சொல்லுங்கள்," என்று வீரர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.
"நாங்கள் அவர்கள் மீது இவ்வளவு பணத்தைச் செலவழிக்கிறோம், அவர்களால் வெவ்வேறு இடங்களில் எதையும் செய்ய முடியவில்லை. நமக்கு சர்வதேச அளவில் கோப்பைகள் ஏதேனும் கிடைத்துள்ளதா? எந்த மட்டத்திலும் நாம் என்ன செய்துள்ளோம்? அவர்களால் விளையாட முடியாமல் போன ஒவ்வொரு முறையும் அவர்களிடம் பணத்தைத் திரும்பக் கேட்போம். திருப்பித் தாருங்கள்."
"வீரர்களுக்கு இழப்பீடு வழங்குவது என்ற கேள்வி ஏன் எழ வேண்டும்?" என்றும் நஸ்முல் ஆவேசமாகக் கூறினார். இதையடுத்து, BCB உடனடியாக ஓர் அறிக்கையை வெளியிட்டது. நஸ்முலின் கருத்துக்கள் முற்றிலும் அவரது தனிப்பட்ட கருத்தே எனத் தெளிவுபடுத்தியது. "அவமதிப்பானது, புண்படுத்தக்கூடியது அல்லது காயப்படுத்துவதாகக் கருதப்படும் கருத்துக்களுக்காக வாரியம் தனது உண்மையான வருத்தத்தைத் தெரிவிக்கிறது. அத்தகைய கருத்துக்கள் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் நிலையை பிரதிபலிக்கவில்லை."
"பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கு சேவை செய்யும் பொறுப்பளிக்கப்பட்டவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் நடத்தை தரங்களுக்கும் இவை ஒத்துப்போகவில்லை," என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது. வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் வழியாக முறையாக வெளியிடப்படாத எந்த அறிக்கைக்கும் BCB ஒப்புதல் அளிக்காது அல்லது பொறுப்பேற்காது என்றும் அது தெளிவுபடுத்தியது. அங்கீகரிக்கப்படாத சேனல்களின் கருத்துக்கள் தனிப்பட்டவை என்றும் வாரியம் குறிப்பிட்டது.
"வீரர்களை அவமதிக்கும் அல்லது பங்களாதேஷ் கிரிக்கெட்டின் புகழ் மற்றும் ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் நடத்தை அல்லது கருத்துக்களைக் கொண்ட எந்தவொரு தனிநபர் மீதும் பொருத்தமான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்பதையும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தனது அறிக்கையில் மிகத் தெளிவுபடுத்தியது.
வீரர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து நஸ்முல் சர்ச்சையில் சிக்குவது இது இரண்டாவது முறை. முன்னதாக, முன்னாள் பங்களாதேஷ் கேப்டன் தமிம் இக்பால் T20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்த BCB முடிவை கவனமாகச் சிந்திக்க வேண்டும் எனக் கோரினார். இதை எதிர்த்து நஸ்முல் ஒரு தமீம் இக்பால் ஒரு இந்திய ஏஜேண்ட் என பேசியிருந்தார்.