மும்பை: இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, தங்களது போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) கோரிக்கை விடுத்துள்ளது. இது கிரிக்கெட் உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.ஐ
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடவிருந்த வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானின் பாதுகாப்புக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (BCCI) உத்திரவாதம் அளிக்க முடியவில்லை என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து, வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

ஐபிஎல் 2026 ஏலத்தில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள சில வலதுசாரி குழுக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக ஊடகங்களில், வங்கதேச வீரர் ஐபிஎல்-ல் விளையாடுவதற்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தன.
இந்த அழுத்தத்தைத் தொடர்ந்து, பிசிசிஐயின் அறிவுறுத்தலின் பேரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முஸ்தாபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிப்பதாக சனிக்கிழமை அறிவித்தது. இந்த நிகழ்வுதான் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை கொந்தளிக்கச் செய்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனர் ஃபரூக் அகமது, "பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, முஸ்தாபிசுரின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்க முடியாது என்று தெரிவித்ததாலேயே அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஒரு வீரருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், கொல்கத்தா மற்றும் மும்பைக்குப் பயணம் செய்யும் எங்கள் முழு அணிக்கும் எப்படிப் பாதுகாப்பு கிடைக்கும்? இது எங்கள் அரசாங்கத்திற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "கிரிக்கெட் வாரியம் அரசின் கீழ் இயங்குகிறது. அரசின் முடிவுகள் எங்களுக்கு மிகவும் முக்கியம். ஒரு வீரரின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாதபோது, அது முழு அணி மற்றும் துணைப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலையாக மாறுகிறது" என்றார்.
இந்த விவகாரம் தீவிரமடைந்ததை அடுத்து, வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஞாயிற்றுக்கிழமை அவசரக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தது. கூட்டத்தின் முடிவில், தற்போதைய சூழலில் வங்கதேச அணி இந்தியாவுக்குப் பயணம் செய்யாது என்று தீர்மானிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தங்கள் அணியின் அனைத்துப் போட்டிகளையும் இந்தியாவில் இருந்து வெளியே, அதாவது இலங்கைக்கு மாற்றுமாறு கோரி ஐசிசிக்கு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுதியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் சர்வதேசப் போட்டிகளில் நேரடியாக மோதாமல், துபாய் போன்ற பொதுவான இடங்களில் 'ஹைப்ரிட் மாடல்' அடிப்படையில் விளையாடுவதை ஃபரூக் அகமது சுட்டிக்காட்டினார். அதேபோன்ற ஒரு ஏற்பாட்டை தங்களுக்கும் செய்ய வேண்டும் என்பது வங்கதேசத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வங்கதேசத்தின் இந்தக் கோரிக்கை குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. போட்டிகள் தொடங்க இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில், போட்டி அட்டவணையை மாற்றுவது மிகவும் சிக்கலான காரியம் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். "அணிகளின் விமானப் பயணச்சீட்டுகள், தங்குமிடங்கள், ஒளிபரப்பு ஏற்பாடுகள் என அனைத்தும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுவிட்டன. ஒருவரின் விருப்பத்திற்காக திடீரென எல்லாவற்றையும் மாற்றுவது சாத்தியமற்றது. இது பெரும் குளறுபடியாக மாறும்." என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அட்டவணைப்படி, வங்கதேச அணி தனது உலகக் கோப்பை லீக் ஆட்டங்களை கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாட உள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள், இத்தாலி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், நேபாளத்திற்கு எதிரான போட்டி மும்பை வான்கடே மைதானத்திலும் நடைபெறவிருந்தது. இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், இந்த நான்கு போட்டிகளும் இலங்கைக்கு மாற்றப்படலாம்.
கிரிக்கெட் வீரரின் பாதுகாப்பு தொடர்பான ஒரு பிரச்சனை, இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கிடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தி, உலகக் கோப்பைப் போட்டிகளையே பாதிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்ன முடிவெடுக்கும் என்பதை கிரிக்கெட் உலகம் மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்றுநோக்கியுள்ளது.