"அடிக்காதீங்க.. நான் ஒரு கிரிக்கெட் வீரர்".. போலீசாரின் தாக்குதலால் அலறிய வங்கதேச வீரர் நயீம் ஹசன்
டாகா: வங்கதேச கிரிக்கெட் வீரர் நயீம் ஹசன், சட்டோகிராம் பகுதியில் தான் காவல்துறையினரால் லத்திகள் மற்றும் பிளாஸ்டிக் குழாய்களால் மோசமாக தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். டாக்கா பிரீமியர் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடிவிட்டு, டாக்கா விமான நிலையத்திலிருந்து சட்டோகிராமில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
வங்கதேச அணிக்காக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 26 வயதான ஆல்-ரவுண்டர் நயீம் ஹசன் தனக்கு நேர்ந்த துயர சம்பவம் பற்றி பொதுவெளியில் கூறினார். அது தற்போது வங்கதேசத்தில் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. நயீம் ஹசன் கூறுகையில், தான் பயணித்த ஆட்டோவை போலீசார் மறித்து, மற்றொரு ஆட்டோவில் ஏறுமாறு கட்டாயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். தான் ஒரு தேசிய கிரிக்கெட் வீரர் என்று பலமுறை அடையாளப்படுத்திய போதிலும், போலீசார் அதை பொருட்படுத்தாமல் தன்னை இஷ்டப்படி தாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கண் சிமிட்டாமல் பேச உத்தரவு
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நயீம் ஹசன், "நான் யார் என்று பலமுறை கூறினேன், ஆனால் அவர்கள் கேட்க மறுத்துவிட்டனர். போலீசார் என்னை பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் லத்திகளால் கண்மூடித்தனமாக தாக்கினர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோதும், அங்கிருந்த பொறுப்பு அதிகாரி என்னிடம் பேசும்போது கண்களை கீழே வைத்தவாறு பேசுமாறு மிரட்டினார். அவர்கள் உண்மையான போலீசாராக இருந்திருந்தால், ஏன் என்னை போலீஸ் வாகனத்தில் ஏற்றாமல் சாதாரண ஆட்டோவில் ஏற்ற முயன்றார்கள்? இந்த முழு சம்பவம் குறித்தும் முறையான விசாரணை நடத்தி எனக்கு நீதி வழங்க வேண்டும்" என்று கூறினார்.
போலீஸ் அதிகாரி அதிரடி விளக்கம்
இந்த குற்றச்சாட்டு குறித்து சட்டோகிராம் பெருநகர போலீஸ் துணை கமிஷனர் அமிருல் இஸ்லாம் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றும், ஆரம்பகட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட போலீசார் தகுந்த வழிமுறைகளை பின்பற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது என்றும் கூறினார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நயீம் ஹசனுக்கு நீதி உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வங்கதேச கிரிக்கெட் வாரியம் கண்டனம்
தேசிய அணியின் கிரிக்கெட் வீரர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாட்டுக்காக விளையாடிய வீரர் ஒருவரை இவ்வாறு நடத்தியது மிகவும் வருந்தத்தக்கது என்றும், இந்த விவகாரத்தை வங்கதேச கிரிக்கெட் வாரியம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக முழுமையான மற்றும் நேர்மையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு வங்கதேசத்தின் மூத்த கிரிக்கெட் வீரரான முஷ்பிகுர் ரஹிம் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். "நயீமிற்கு நேர்ந்த இந்த கொடுமை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. வங்கதேச குடிமகனாக இதற்கு நான் எனது பலத்த எதிர்ப்பை பதிவு செய்கிறேன். இந்த சம்பவம் என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது. நயீம், நாங்கள் எப்போதும் உன்னுடன் இருக்கிறோம்" என்று அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
