விமான டிக்கெட் எடுத்து வரலாம்... ஜாமீனில் வந்து உலக கோப்பையில் விளையாடும் வீரரை தெரியுமா?
டாக்கா: உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான அணியில் தேர்வு செய்யப்பட்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ருபேல் ஹொசைன், நடிகை ஒருவர் கொடுத்த பலாத்கார புகாரின்பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் அந்த வழக்கில் ஜாமீன் பெற்று வந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.
19 வயதான, வங்கதேச சினிமா நடிகையான நஸ்னின் அக்தர் ஹேப்பிக்கும், அந்நாட்டின் வேகப்பந்து வீச்சாளர் ருபேல் ஹொசைனுக்கும் இடையே காதல் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நஸ்னின், பரபரப்பு புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்தார். அந்த புகாரில், ருபேல் தன்னை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்ததால், இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்ததாகவும், ஆனால் திடீரென ருபேல் திருமணம் செய்ய மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

பிளாக்-மெயில்
இதனிடையே செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த, நஸ்னின், திருமணத்திற்கு ருபேல் சம்மதித்தால் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் ருபேல், இக்குற்றச்சாட்டை மறுத்துவந்தார். இது ஒரு பிளாக்-மெயில் என்று கூறிவந்தார்.

புகார் நடுவே பெயர்
இதனிடையே கடந்த ஜனவரி முதல் வாரத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம், உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான பதினைந்து வீரர்கள் பெயர் பட்டியலை அறிவித்தது. அதில் ருபேல் பெயரும் இடம் பெற்றிருந்தது.

சிறையில் அடைப்பு
எனவே உலக கோப்பைக்கான ஆயத்த பயிற்சிகளில் ருபேல் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், அவரை கைது செய்ய கடந்த ஜனவரி 8ம்தேதி டாக்கா நகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த விசாரணை வரும்வரை அவர் சிறையில்தான் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது கோர்ட். இதையடுத்து ருபேல் போலீசில் சரணடைந்தார். சிறையில் அடைக்கப்பட்டார்.

களமிறங்கியாச்சு
இந்நிலையில் ஜனவரி 11ம்தேதி கோர்ட் அவரை ஜாமீனில் வெளியே விட்டது. ஜாமீனில் வெளியே வந்த ருபேல் ஆஸ்திரேலியாவுக்கும் பயணப்பட்டு வந்தார். வங்கதேசத்துக்காக உலக கோப்பை போட்டிகளில் களமிறங்கி ஆடியும் வருகிறார் ருபேல் ஹொசைன். இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வங்கதேசத்தின் முதல் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் ருபேலும் இடம்பெற்றுள்ளார். தொடக்கத்திலேயே விக்கெட்டையும் வீழ்த்தினார். மேலும் ஆப்கன் வீரர் மங்கலை அபாரமான கேட்ச் மூலம் அவுட்டும் செய்தார்.

நல்ல வீரர்
22 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ருபேல் 32 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த சாதனைக்கு சொந்தக்காரர் ருபேல் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications