மும்பை : சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் செய்த சம்பவம் தற்போது ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்திய ஆடவர் அணியை விட இந்திய மகளிர் அணி விளையாடும் போட்டியில் தான் பல விவாதங்களும் சர்ச்சைகளும் எழுகின்றன.
இங்கிலாந்துக்கு எதிராக தீப்தி சர்மா ரன் அவுட் செய்த சம்பவம் பெறும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வங்கதேசத்துக்கு எதிரான தொடரிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

டி20 தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இருந்தது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தான் கோப்பையை வெல்வார்கள் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 225 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இதனை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்த போது 33.4 ஓவரில் இருந்த போது 160 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தனர்.ஆனால் அவர்களும் சரசரவென விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களில் சுருண்டனர்.
இதன் மூலம் போட்டி டையில் முடிந்தது. இந்த நிலையில் நடுவர் தவறான முறையில் அவுட் வழங்கியது இந்தப் போட்டி சமனில் முடிந்ததற்கான காரணம் என்று ஹர்மன்பிரித் கவுர் தெரிவித்தார். மேலும் நடுவர்களை களத்திலே திட்டிய ஹர்மன்பிரித் ஸ்டெம்பையும் தனது பேட்டால் அடித்து உடைத்தார். எப்போதும் ஒரு தொடர் சமனில் முடிவடைந்தால் இரு அணி கேப்டன்கள் கோப்பையை பகிர்ந்து கொள்வார்கள்.
அதன் பிறகு இரு அணி வீரர்களும் இணைந்து கோப்பையுடன் போஸ் கொடுப்பார்கள். மேலும் எந்த நாட்டில் தொடர் நடைபெறுகிறதோ, கோப்பை பகிர்ந்து கொள்ளப்பட்டால் அவர்களிடமே வழங்கிவிட்டு எதிரணி வந்துவிடும். ஆனால் இதற்கு மாறாக நேற்று இரு அணி வீரர்களும் கோப்பையுடன் போஸ் கொடுத்த போது வங்கதேச கேப்டன் நிகர் சுல்தானா பாதியிலேயே தன்னுடைய வீராங்கனைகளை அழைத்து ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று விட்டார்.
இதற்கு காரணம் ஹர்மன்பிரித் சொன்ன வார்த்தைகள் தான் என்று நிகர் சுல்தானா குற்றம் சாட்டியுள்ளார். கோப்பையை பகிர்ந்து அளிக்கும் போது தங்களிடம் உங்களுடைய நடுவர்களையும் அழைத்து வாருங்கள். அவர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்வோம் என்று கூறினார். இது மிகவும் தவறான வார்த்தையாகும். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தாங்கள் கோப்பையை வாங்காமல் சென்று விட்டதாக வங்கதேச வீராங்கனை குற்றம் சாட்டியுள்ளார்.