60 ரன்களுக்கு ஆல் அவுட்.. நியூசிலாந்தை சில்லு சில்லாக உடைத்தெறிந்த வங்கதேசம் - ரணகள ஆட்டம்!
டாக்கா: இந்த வங்கதேச அணிக்கு என்ன தான் ஆச்சு? என்று ரசிகர்கள் நேரடியாகவே கேட்கத் தொடங்கிவிட்டனர். நியூசிலாந்து அணியை முதல் போட்டியிலேயே 60 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து அலற வைத்திருக்கிறது.
நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று (செப்.1) டாக்காவில் தொடங்கியது.
ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியை 4-1 என்று டி20 தொடரில், வங்கதேசம் வீழ்த்தியிருந்த நிலையில், இத்தொடர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

வெறும் 60 ரன்கள்
இந்நிலையில், இன்று டாக்காவில் முதல் டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. டாம் பிளண்டல், ரச்சின் ரவீந்திரா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் டாம் 2 ரன்னிலும், ரவீந்திரா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேற அடுத்து களமிறங்கிய வில் யங் 5 ரன்னிலும், கோலின் டி கிராண்ட்ஹோம் 1 ரன்னிலும் அவுட்டாக, 9 ரன்கள் எடுப்பதற்குள் டாப் 4 விக்கெட்டுகளை நியூசிலாந்து இழந்தது தத்தளித்தது. இதன் பிறகு, கேப்டனும் விக்கெட் கீப்பருமான டாம் லாதம் மற்றும் ஹென்றி நிகோலஸ் தலா 18 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் இவர்கள் இருவர் மட்டும் தான் டபுள் டிஜிட் ரன்கள் எடுத்தவர்கள். மற்ற அனைவரும் சிங்கிள் டிஜிட் தான். முடிவில், 16.5 ஓவர்கள் முடிவில், அந்த அணி வெறும் 60 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அபார பவுலிங்
பிறகு களமிறங்கிய வங்கதேசம், 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடனான கடைசி டி20 போட்டியில், அந்த அணியை 62 ரன்களுக்கு ஆல் அவுட் செய்திருந்த வங்கதேசம், இப்போது நியூசிலாந்தை 60 ரன்களில் சுருட்டியுள்ளது. இதில் முஸ்தாபிசுர் 3 விக்கெட்டுகளையும், ஷகிப், சைஃபுதீன் மற்றும் நசும் அஹ்மத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இது இரண்டாவது முறை
டி 20 சர்வதேச போட்டிகளில் நியூசிலாந்து 60 ரன்களுக்கு ஆல் அவுட்டாவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன், 2014 ல் நடந்த போட்டியில், நியூசிலாந்து 60 ரன்களுக்கு இலங்கைக்கு எதிராக ஆல் அவுட்டானது. ஆனால், இதில் என்ன ஒரு சுவாரஸ்யம் என்றால், அந்த போட்டியும் வங்கதேசத்தில் தான் நடைபெற்றது. மேலும், வங்கதேசம் அணிக்கு எதிராக எந்தவொரு அணியின் மிகக் குறைந்த டி20 ஸ்கோர் இதுவாகும், இப்போது எதிரணியை 100-க்கும் குறைவான ரன்களில் அடுத்தடுத்து வீழ்த்தியுள்ளது. நியூசிலாந்து அணி தனது கடைசி 5 விக்கெட்டுகளை 17 ரன்களில் இழந்துள்ளது.

அபார வெற்றி
இதுதொடர் தொடங்குவதற்கு முன்பு, கேப்டன் மஹ்முதுல்லா வங்கதேச அணிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதாவது, நியூசிலாந்து அணியில் முக்கியமான வீரர்கள் இல்லை என்றாலும், அந்த அணிக்கு எதிராக மெத்தனமாக இருக்க முடியாது. கேன் வில்லியம்சன், ட்ரென்ட் போல்ட், கைல் ஜேமிசன் மற்றும் லோக்கி ஃபெர்குசன் போன்ற வீரர்கள் இத்தொடரில் இல்லை என்றாலும், நாம் மெத்தனமாக இருக்க முடியாது என்று அட்வைஸ்-லாம் செய்திருந்தார். ஆனால், இப்போது வங்கதேசம் நியூசிலாந்தை பஞ்சு பஞ்சாய் பறக்க விட்டிருக்கிறது. அமீரகத்தில் வரும் நவம்பர் மாதம் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில், வங்கதேசம் மிக அபாரமான ஆட்டத்தை டி20 போட்டிகளில் வெளிப்படுத்தி வருகிறது. இப்போது இவர்கள் இருக்கும் ஃபார்மை பார்த்தால், வங்கதேசம் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


Click it and Unblock the Notifications