முதல் நாள் "150".. மறுநாள் "ஓய்வு".. வங்கதேச வீரர் "திடீர்" முடிவு - ரசிகர்கள் ஷாக்
ஹராரே: வங்கதேச அணியின் டாப் மோஸ்ட் வீரர்களில் ஒருவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அதிரடியாக ஓய்வு பெறவிருக்கிறார். அதுவும் 150 ரன்கள் அடித்த பிறகு.
தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வங்கதேச அணி, அங்கு ஒரேயொரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
தற்போது அங்கு டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இரு சிறிய அணிகள் மோதும் போட்டி என்றாலும், வங்கதேசத்துக்கு இன்று இருக்கும் மார்க்கெட் வேல்யூ, ரசிகர்களை தேடிச் சென்று போட்டியை காண வைக்கிறது.

150 ரன்கள்
ஹராரேவில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 468 ரன்கள் குவித்தது. இதில், வங்கதேச வீரர் மஹ்மதுல்லா 278 பந்துகளில் 150 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 17 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். அதேபோல், லிட்டன் தாஸ் 95 ரன்களும், டஸ்கின் அகமது 75 ரன்களும் எடுத்தனர்.

மஹ்மதுல்லா
இதன்பிறகு, ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்ஸில் 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிறகு, வங்கதேசம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஒரேயொரு விக்கெட்டை மட்டும் இழந்து 284 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்நிலையில், திடீரென, வங்கதேச வீரர் மஹ்மதுல்லா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக Cricbuzz செய்தி வெளியிட்டுள்ளது.

நீடிக்க விரும்பவில்லை
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், "ஆம், இந்த ஆட்டத்திற்குப் பிறகு தனது டெஸ்ட் வாழ்க்கையை நீடிக்க விரும்பவில்லை என்று அவர் (மஹ்முதுல்லா) தெரிவித்திருந்தார். ஆனால் அவர் எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை, அது ஒரு உணர்ச்சிபூர்வமான அறிவிப்பா இல்லையா என்பதை நாம் பார்க்க வேண்டும்" என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாக Cricbuzz தெரிவித்துள்ளது.

8 விக்கெட்டுகள்
மஹ்முதுல்லா 49 டெஸ்ட் போட்டிகளில் 4 அரை சதங்களுடன் 2764 ரன்கள் எடுத்துள்ளார். ஆவரேஜ் 31 பிளஸ். 35 வயதான மஹ்முதுல்லா 2009 ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அதில் அவர் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை, ஆனால் தனது அறிமுக போட்டியிலேயே 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில், இரண்டாவது இன்னிங்ஸில் பெற்ற ஐந்து விக்கெட்டுகள் அடங்கும். அதுமட்டுமல்ல, வெளிநாட்டில் வங்கதேசம் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பெறவும் அவர் உதவினார்.


Click it and Unblock the Notifications