டாக்கா: 2026 ஐபிஎல் தொடரிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை கட்டாயப்படுத்தி வெளியேற்றிய விவகாரம் தற்போது பூதாகரமாக மாறி உள்ளது. "இந்தியாவில் ஒரு வீரருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், எங்கள் முழு அணியும் எப்படி அங்கே வந்து உலகக்கோப்பை விளையாடும்?" என்று கேள்வி எழுப்பியுள்ள வங்கதேச அரசு, தங்கள் நாட்டுப் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றக்கோரி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை (ICC) நாடவுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி ரூ. 9.20 கோடிக்கு வாங்கிய முஸ்தஃபிசுர் ரஹ்மானை, அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக விடுவிக்குமாறு பிசிசிஐ உத்தரவிட்டது. இது வங்கதேச அரசை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

வங்கதேச இடைக்கால அரசின் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகவும் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், "வகுப்புவாத சக்திகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பணிந்துவிட்டது. முஸ்தஃபிசுர் ரஹ்மானை நீக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கோ அல்லது வங்கதேசத்திற்கோ ஏற்படும் அவமானத்தை நாங்கள் இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம். அடிமைத்தனத்தின் நாட்கள் முடிந்துவிட்டன," என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆசிப் நஸ்ருல் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு (BCB) பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
"சட்டப்பூர்வமான ஒப்பந்தம் வைத்துள்ள ஒரு தனி வீரருக்கே இந்தியாவில் விளையாட அனுமதி மற்றும் பாதுகாப்பு இல்லை என்றால், டி20 உலகக்கோப்பைக்காக வரும் ஒட்டுமொத்த வங்கதேச அணிக்கும் பாதுகாப்பு இருக்காது."
"எனவே, பாதுகாப்பு கருதி பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள வங்கதேச அணியின் உலகக்கோப்பை போட்டிகளை, அண்டை நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று ஐசிசி-க்கு உடனடியாகக் கடிதம் எழுதுங்கள்."
2026 டி20 உலகக்கோப்பை அட்டவணைப்படி, வரும் பிப்ரவரி 7-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக வங்கதேசம் தனது முதல் போட்டியில் விளையாட வேண்டும். மேலும் பிப்ரவரி 9 மற்றும் 14 ஆகிய தேதிகளிலும் கொல்கத்தாவில் போட்டிகள் உள்ளன. தற்போது வங்கதேசத்தின் இந்த நிலைப்பாட்டால் இப்போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பிசிசிஐ நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகளைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பத் தடை விதிக்குமாறும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு விரிசலடைந்துள்ள நிலையில், வரும் செப்டம்பர் மாதம் இந்திய அணி வங்கதேசத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த திட்டத்தையும் பிசிசிஐ கிடப்பில் போட்டுள்ளதாகத் தெரிகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி வங்கதேசம் செல்ல வாய்ப்பில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.