அறிமுகமே அசத்தல்.. டெஸ்ட் வருகையை பிரம்மாண்டமாக அறிவித்த வங்கதேச வீரர்.. யார் இந்த ஜாகிர் ஹசன்?
சாட்டாகிராம்: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி அறிமுக போட்டியிலேயே தனது வருகையை பிரம்மாண்டமாக அறிவித்துள்ளார் வங்கதேச தொடக்க வீரர் ஜாகிர் ஹசன்.
வங்கதேச அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 254 ரன்கள் என்ற இலக்குடன் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சில் அதிரடி காட்டியது. குறிப்பாக சுப்மான் கில், புஜாரா ஆகியோர் சதம் விளாசினர். இதனால் இந்திய அணி 2வது இன்னிங்ஸ் முடிவில் 258 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

வங்கதேச அணி பேட்டிங்
இதனையடுத்து 513 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி தங்களது இன்னிங்சை தொடர்ந்தது. அப்போது ஆடுகளத்தின் தன்மை திடீரென்று பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது. இதனைத் தொடர்ந்து வங்கதேச தொடக்க வீரர்களான ஷாண்டோ - ஜாகிர் ஹசன் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

பந்துவீச்சாளர்களுக்கு சோதனை
குறிப்பாக ஜாகிர் ஹசனின் தடுப்பாட்டம் இந்திய ரசிகர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இந்திய அணியின் உமேஷ் யாதவ், சிராஜ், அஸ்வின் என யார் பந்துவீசினாலும் சிறப்பாக தடுத்து நிறுத்தியதோடு, சரியான நேரத்தில் ரன்கள் சேர்க்க தொடங்கினார். தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் விளாச, ஆட்டத்தில் ஏதேனும் ட்விஸ்ட் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

கவனம் ஈர்த்த ஜாகிர் ஹசன்
இதனைத் தொடர்ந்து முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்த நிலையில், தொடக்க வீரர் ஷாண்டோ 67 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் மறுபக்கம் சிறப்பாக ஆடிய ஜாகிர் ஹசன் அறிமுக போட்டியிலேயே சதம் விளாசினார். இதுவரை இந்திய அணிக்கு எதிராக வங்கதேச அணி வீரர்கள் பெரிய போராட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், 4வது இன்னிங்ஸில் ஜாகிர் ஹசன் சதம் விளாசியது பலரையும் திரும்பி பார்க்கவுள்ளது.

யார் இந்த ஜாகிர் ஹசன்?
2016ம் ஆண்டு நடைபெற்ற யு-19 உலகக்கோப்பைத் தொடரில் ஜாகிர் ஹசன் விளையாடியவர். அதனைத் தொடர்ந்து வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் பலரையும் கவனிக்க வைக்க, வங்கதேச தேர்வுக் குழுவின் கவனம் ஜாகிர் ஹசன் மீது விழுந்துள்ளது. பார்ட் டைம் விக்கெட் கீப்பரான இவர், வங்கதேச டெஸ்ட் அணியின் வருங்கால வீரராக இருப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications