விராட் கோலி டெஸ்ட் ரெக்கார்டை உடைத்த கேன் வில்லியம்சன்.. 29வது சதம் விளாசல் - BAN vs NZ
ஸில்ஹெட் : விராட் கோலியின் 29 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த சாதனையை சமன் செய்தார் கேன் வில்லியம்சன்.
அதிலும் விராட் கோலியை விட விரைவாக 29 டெஸ்ட் சதம் அடித்து அவரது சாதனையை முறியடித்து இருக்கிறார். மேலும், பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறார்.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் சதம் அடித்து இந்த சாதனையை செய்து இருந்தார். இந்தப் போட்டியில் அவர் அடித்த 29வது சதம் மூலம் தொடர்ந்து நான்கு போட்டிகளில் சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்.

மேலும், அவர் தொடர்ந்து மூன்று டெஸ்ட் இன்னிங்ஸில் சதம் அடித்து இருக்கிறார். அதன் மூலம் நியூசிலாந்து அணிக்காக தொடர்ந்து மூன்று டெஸ்ட் இன்னிங்ஸில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன் நியூசிலாந்து வீரர் ஆண்ட்ரூ ஜோன்ஸ் தொடர்ந்து மூன்று டெஸ்ட் இன்னிங்ஸில் சதம் அடித்து இருந்தார்.
நியூசிலாந்து அணி, வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. அங்கே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்க்ஸில் 310 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் சரியாக ரன் குவிக்காத போதும் கேன் வில்லியம்சன் தனி ஆளாக நின்று ரன் சேர்த்தார்.
அவர் 29வது டெஸ்ட் சதம் கடந்து, 205 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். வில்லியம்சனுக்கு அடுத்து அதிகபட்சமாக டேரில் மிட்செல் 41, கிளென் பிலிப்ஸ் 42 ரன்கள் சேர்த்தனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி தற்போது 44 ரன்கள் பின்தங்கி உள்ளது. 8 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில், மூன்றாவது நாள் நியூசிலாந்து அணியின் கடைசி பேட்ஸ்மேன்கள் 310 ரன்களை தாண்டுவது கடினம் என்றே கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications