டெஸ்ட் மேட்ச் மாதிரி ஆடினாங்க.. ஆனா இவ்ளோ ஸ்கோர் எப்படி? 8 பந்தில் எகிறிய வங்கதேச ஸ்கோர் - BAN vs NZ
சென்னை : வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் டெஸ்ட் போட்டி போலவே ஆடியது.
நிறைய டாட் பால்களை ஆடியது. சிங்கிள் ரன் ஓடக் கூட யோசித்தது அந்த அணி.
ஆனால், எப்படியோ 50 ஓவர்களில் 245 ரன்களை எட்டி விட்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஸ்கோர் எடுப்பது மோசமில்லை. அதை வங்கதேசம் எப்படி செய்தது என்பதில் தான் விஷயமே உள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. வங்கதேச அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி அளித்தர் துவக்க வீரர் லிட்டன் தாஸ். போட்டியின் முதல் பந்திலேயே அவர் டக் அவுட் ஆனார்.
மற்றொரு துவக்க வீரர் தன்சித் ஹசன் 16 ரன்களிலும், நஜ்முல் ஷான்டோ 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் மெஹிதி ஹசன் ஆமை வேக ஆட்டம் ஆடி 46 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் ஷகிப் அல் ஹசன் - முஷ்பிகுர் ரஹீம் ஜோடி பொறுப்பாக ஆடினர். ஷகிப் 40, ரஹீம் 66 ரன்கள் சேர்த்தனர். இவர்கள் நிறைய டாட் பால்கள் ஆடினாலும், இருவரும் தலா 2 சிக்ஸர்கள் அடித்தனர்.
கடைசி பத்து ஓவர்களில் கூட பல ஓவர்களில் 5 ரன்களுக்கும் கீழ் தான் ரன் எடுத்தது வங்கதேசம். அந்த ஓவர்களில் மக்மதுல்லா, தஸ்கின் அஹமது நிதான ஆட்டம் ஆடினாலும், தலா 2 சிக்ஸர்களை அடித்தனர்.

வங்கதேசம் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 245 ரன்கள் எடுத்தது. இதில் 8 சிக்ஸர்கள் மூலம் மட்டுமே 48 ரன்கள் கிடைத்தது. 292 பந்துகளில் 197 ரன்கள் எடுத்த வங்கதேசம், அந்த 8 பந்துகளில் அடித்த சிக்ஸர்கள் மூலம் தங்கள் ஸ்கோரை 245 ஆக உயர்த்தியது.
நியூசிலாந்து அணிக்கு 246 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயித்துள்ளது வங்கதேசம். இது சென்னை ஆடுகளத்தில் நல்ல சவாலான இலக்கு தான். எனினும், வங்கதேசம் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெல்ல முடியும்.


Click it and Unblock the Notifications