10 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் ஸ்பின்னர்.. தவித்துபோன நியூசிலாந்து அணி.. வரலாறு படைத்த வங்கதேசம்!
டாக்கா: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளது.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷான்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 310 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக தொடக்க வீரர் மமுதுல் ஹசன் 86 ரன்களை விளாசினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 317 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் வில்லியம்சன் 104 ரன்களை விளாசி அசத்தினார். வங்கதேச அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய டைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி, 2வது இன்னிங்ஸில் 338 ரன்களை குவித்தது.
சிறப்பாக ஆடிய கேபன் ஷான்டோ 105 ரன்களையும், மெஹதி ஹசன் 50 ரன்களையும் விளாசினர். இதனால் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 332 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 4வது நாளில் 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நட்சத்திர வீரர் வில்லியம்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக 4வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 113 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
பின்னர் இன்று தொடங்கிய 5வது நாள் ஆட்டத்தில் டேரல் மிட்சல் - இஷ் சோதி இருவரும் தொடங்கினர். அதில் மிட்சல் 58 ரன்களும், டிம் சவுதி34 ரன்களிலும், இஷ் சோதி 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் காரணமாக வங்கதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சாதனை படைத்தது. சிறப்பாக பந்துவீசிய இஸ்லாம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணியை சொந்த மண்ணில் முதல்முறையாக வங்கதேச அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications