தரம்சாலா: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 3வது லீக் போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. ஆசிய கோப்பை தொடரிலேயே இரு அணிகளும் மோதிய போட்டி விறுவிறுப்பாக அமைந்தது. அதேபோல் அண்மையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் வங்கதேச அணியை அதன் சொந்த மண்ணில் வைத்தே ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தி சாதனை படைத்தது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதுகுறித்து வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேசுகையில், நாங்கள் ஃபீல்டிங் செய்யவே விரும்புகிறோம். இந்த மைதானத்தில் சேஸிங் எளிதாக இருக்கும். அதுதான் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய காரணம். அதேபோல் தொடக்கத்தில் சில ஓவர்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். அதனை பயன்படுத்த விரும்புகிறோம். வங்கதேச அணிக்காக 5வது முறையாக களமிறங்கியது மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் எங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாடுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகிடி பேசுகையில், இந்த உலகக்கோப்பை தொடரில் கூடுதம் உறுதியுடன் களமிறங்குகிறோம். இந்த உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. சிறப்பாக பேட்டிங் செய்து வங்கதேச அணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதுதான் எங்களின் இலக்கு. எங்களின் அணியினர் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இந்திய மைதானங்கள் தான் எங்களின் சொந்த மைதானமாக இருந்தது என்று தெரிவித்தார்.
ஆஃப்கானிஸ்தான் அணி இதுவரை ஸ்காட்லாந்து அணியை மட்டுமே உலகக்கோப்பை தொடரில் வீழ்த்தி இருக்கிறது. இதனால் இந்த போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆஃப்கானிஸ்தான் அணியில் விராட் கோலியின் பங்காளியான நவீன் உல் ஹக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சும் வலிமை பெற்றுள்ளது.
வங்கதேச அணி விவரம்: தன்ஜித் ஹசன், லிட்டன் தாஸ், ஷாண்டோ, மெஹதி ஹசன் மிராஸ், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம், ஹிர்தாய், மஹ்மதுல்லா, டஸ்கின் அஹ்மத், இஸ்லாம், முஷ்தாஃபிகு ரஹ்மான்
ஆஃப்கானிஸ்தான் அணி விவரம்: குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரான், ரஹ்மத் ஷா, ஹஸ்மதுல்லா ஷாகிடி, முகமது நபி, ஜத்ரான், ஒமர்சாய், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல் ஃபரூக்கி