கொழும்பு: இலங்கை அணிக்கு எதிராக ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடருக்கான சூப்பர் 4 சுற்றுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்த வங்கதேசம் அணி, இம்முறை இலங்கை அணியை எதிர்த்து களமிறங்கியுள்ளது. குரூப் சுற்றில் நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணியை இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதனால் சூப்பர் 4 போட்டியில் வங்கதேச அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரு அணிகளுக்கு இடையில் நாகினி ரைவல்ரியும் இருப்பதால், போட்டியை இரு நாட்டு ரசிகர்களும் அதிகமாக எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இதுகுறித்து வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேசுகையில், மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், முதலில் பந்துவீச விரும்புகிறோம். இந்தப் போட்டியில் எங்கள் அணியில் கூடுதலாக ஒரு பவுலரை இணைத்திருக்கிறோம். வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளோம். அதேபோல் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதல்ல என்பதும் தெரியும். கடந்த போட்டியில் ஆடிய ஹொசைனுக்கு பதிலாக நாசும் களமிறங்குவதாக தெரிவித்தார்.
பின்னர் இலங்கை அணி கேப்டன் ஷனகா பேசுகையில், நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். ஏனென்றால் ஃபிளட் லைட்டில் கொஞ்சம் சீமும், ஸ்பின்னும் கிடைக்கும். ஒருநாள் போட்டிகளில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால், இலக்கை டிஃபெண்ட் செய்வது எளிதல்ல. எங்களிடமும் தீக்சனா, பதிரானா போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் இருக்கிறார்கள். ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வென்றதற்கு அவர்களே காரணம் என்று தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் 13 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்ற இரண்டாவது அணி என்ற சாதனையை படைக்கும். இதற்கு முன் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா அணி 2003ல் தொடர்ச்சியாக 21 போட்டிகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.