BBL 2025- பைனலில் 39 பந்துகளில் சதம்.. சிஎஸ்கே வீரர் தலைமை தாங்கிய ஹாபார்ட் ஹரிகேன்ஸ் அணி சாம்பியன்
ஹாபர்ட் : பிக் பேஷ் லீக் தொடரில் சாம்பியன் பட்டத்தை ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது. ஹாபார்டில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சிட்னி தண்டர் அணியும் சிஎஸ்கே வீரர் நாதன் எலீஸ் தலைமையிலான ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் பல பரிட்சை நடத்தியது.
இதில் டாஸ் வென்ற ஹாபர்ட் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய சிட்னி தண்டர் அணியில் தொடக்க வீரர் ஜேசன் சங்கா 42 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார். கேப்டன் டேவிட் வார்னர் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.

சாம் பில்லிங்ஸ் 20 ரன்களும், டேவிஸ் 26 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இறுதியில் அதிரடியாக ஆடிய கிறிஸ் கிரீன் 16 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். இதனால் சிட்னி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. ஹாபர்ட் அணியின் பந்துவீச்சில் சிஎஸ்கே வீரர் நாதன் எலிஸ் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை அடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய மிட்செல் ஓவன் பிக் பேஷ் லீக் தொடர் பைனலில் வரலாற்றில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடினார். கம்ப்யூட்டர் கேமில் வருவது போல் சிட்னி அணியின் பந்துவீச்சை சுக்கு நூறாக அவர் உடைத்தார்.
சிக்ஸர் பவுண்டரி என அவர் பறக்க விட்டார். 18 பந்துகளில் அரை சதத்தை கடந்த மிட்செல் ஓவன் தொடர்ந்து அதிரடியை காட்டினார். அவரை கட்டுப்படுத்த சிட்னி அணியால் முடியவில்லை. இதன் காரணமாக 39 பந்துகளில் எல்லாம் மிட்செல் ஓவன் சதத்தை கடந்தார்.
இறுதியில் மிட்செல் ஓவன் 42 பந்துகளில் 108 ரன்கள் விளாசினார். இதில் 11 சிக்ஸர்களும், ஆறு பவுண்டரிகளும் அடங்கும். மிட்செல் ஓவனை தனி ஆளாக நின்று போட்டியை மாற்றினார். இறுதியில் மேத்தீவ் வெட் 17 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 14.1 ஓவரில் எல்லாம் மூன்று விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது.
23 வயதான ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஓவன் பிக் பேஷ் லீக் தொடரில் அதிவேக சதத்தை அடித்து சமன் செய்து இருக்கிறார். இதற்கு முன்பு 2014 ஆம் ஆண்டு பெர்த் அணிக்காக விளையாடிய சிமென்ஸ் 39 பந்துகளில் சதம் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே வீரர் நாதன் எலிஸ் தலைமை தாங்கிய அணி கோப்பையை வென்றெடுப்பது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications