சென்னையில் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ்.. சிட்னியில் அறிவிக்கப் போகும் பிரதமர் மோடி.. பின்னணி என்ன?
சென்னை: ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற உள்நாட்டு டி20 தொடரான 'பிக் பாஷ் லீக்' வரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய மண்ணில் நடத்தப்பட உள்ளது. சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 12 அன்று நடைபெறவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி குறித்த அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவில் அறிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 8 முதல் 10 வரை ஆஸ்திரேலியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிட்னியில் நடைபெறும் இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தகம் குறித்த கூட்டத்தின் போது, இரு நாடுகளுக்கு இடையிலான விளையாட்டுப் பிணைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிடவுள்ளார்.

டிசம்பர் 12 அன்று சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் தொடங்கும் இந்தத் தொடரின் முதல் லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறுகின்றன. ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு டி20 போட்டி ஒன்று இந்திய மண்ணில் நடத்தப்படுவது கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
இப்போட்டியை நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம் சென்னைக்கு வந்து சேப்பாக்கம் மைதானத்தின் வசதிகளை ஆய்வு செய்தனர். பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) ஆகியவற்றுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் கிடைத்ததைத் தொடர்ந்து இப்போட்டியை நடத்த ஆஸ்திரேலிய வாரியம் முடிவு செய்துள்ளது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி தனது சொந்த நாட்டுப் போட்டியை விட்டுக்கொடுத்து இப்போட்டியை சென்னையில் நடத்துகிறது.
இந்தப் போட்டியை நடத்துவதில் சில சவால்களும் உள்ளன. ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு நேரடி விமான வசதிகள் இல்லாததால் வீரர்கள் 13 மணி நேரம் வரை பயணம் செய்ய வேண்டியிருக்கும். மேலும், டிசம்பர் மாதத்தில் சென்னையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்கும் என்பதால் வானிலை ஒரு முக்கிய சவாலாக இருக்கும்.
ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு வசதியாக பகல் போட்டியாக நடத்துவதா அல்லது மின்விளக்கு வெளிச்சத்தில் இரவு போட்டியாக நடத்துவதா என்ற ஆலோசனைகளும் நடந்து வருகின்றன. எனினும், இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையேயும் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
