மீண்டும் ஐபிஎல்-லில் ஆடுங்க என முஸ்தபிசுருக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்ததாக பரவும் தகவல்.. உண்மை என்ன?
டாக்கா: 2026 ஐபிஎல் தொடரில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் மீண்டும் விளையாட வாய்ப்புள்ளதாகத் பரவிய தகவல்களை, வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் (BCB) அமினுல் இஸ்லாம் புல்புல் திட்டவட்டமாக மறுத்துள்ளார். "இதில் துளியும் உண்மையில்லை" என்று அவர் கூறியிருப்பது சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
2026 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முஸ்தபிசுர் ரஹ்மானை 9.2 கோடிக்கு வாங்கி இருந்தது. இதற்கிடையே, சமீபகாலமாக நிலவும் அரசியல் பதற்றங்கள் காரணமாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியிலிருந்து முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இரு நாட்டு வாரியங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கசப்புணர்வைப் போக்குவதற்காக, பிசிசிஐ மீண்டும் முஸ்தபிசுரை ஐபிஎல் தொடரில் சேர்த்துக்கொள்ள அழைப்பு விடுத்ததாக வங்கதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது உலகக் கோப்பைக்கு முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தச் செய்திகள் குறித்து 'அஜ்கர் பத்ரிகா' ஊடகத்திற்குப் பேட்டியளித்த அமினுல் இஸ்லாம் புல்புல் கூறியதாவது: "முஸ்தபிசுர் ரஹ்மான் மீண்டும் ஐபிஎல்-லில் சேர்ப்பது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் (BCCI) எனக்கு எந்தவிதமான எழுத்துப்பூர்வமான அல்லது வாய்மொழிப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. ஊடகங்களில் பரப்பப்படும் இந்தச் செய்திகளில் துளியும் உண்மையில்லை. இது முற்றிலும் வதந்தியே." என்றார்.
ஐபிஎல் கதவு அடைக்கப்பட்ட நிலையில், முஸ்தபிசுர் ரஹ்மான் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL 2026) தொடருக்கான ஏலத்தில் தனது பெயரைப் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 7-ம் தேதி இந்தியாவில் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பையில், பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேச அணி இந்தியா வராது என்பதில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்னும் உறுதியாக உள்ளது.
கொல்கத்தா மற்றும் மும்பையில் நடைபெறவுள்ள தங்கள் உலகக்கோப்பை லீக் போட்டிகளை இலங்கைக்கு மாற்றக் கோரி ஐசிசி-க்கு ஏற்கனவே இரண்டாவது முறையாகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஐபிஎல் விவகாரத்தால் தொடங்கிய இந்த விரிசல், உலகக் கோப்பைத் தொடரையே பாதிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது.


Click it and Unblock the Notifications