வேற வழியே இல்லை.. ஆஸி. கிளம்பும் இந்திய அணி.. கொரோனாவை எதிர்த்து பிசிசிஐ அதிரடி முடிவு!
மும்பை : இந்திய அணி நீண்ட இடைவெளிக்கு பின் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் உலகம் முடங்கிக் கிடக்கும் நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகளை நடத்த தயாராகி வருகிறது.
நவம்பர் மாதம் நடைபெற வேண்டிய இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை எப்படியாவது நடத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அமைப்பு முயன்று வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகில் விளையாட்டுப் போட்டிகள் பலவும் நிறுத்தப்பட்டுள்ளன. கிரிக்கெட் போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல முன்னணி கிரிக்கெட் நாடுகள் கூட வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளன.

தள்ளிப் போன ஐபிஎல்
பிசிசிஐ பணக்கார அமைப்பு என்பதால் நிதி சிக்கல் எழவில்லை என்றாலும், 2020 ஐபிஎல் தொடரை நடத்த முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளது. கால வரையின்றி 2020 ஐபிஎல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் நடக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

கடும் நஷ்டம்
பிசிசிஐக்கு இதனால் சுமார் 3000 கோடி வரை நஷ்டம் ஆகும் என கூறப்படுகிறது. அதே போல, கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பும் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் ரத்தானால் சில ஆயிரம் கோடி நஷ்டம் அடைய நேரிடும் என கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் குறைந்த தாக்கம்
அதனால், கூடிய விரைவில் கிரிக்கெட் போட்டிகளை துவங்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா தயாராகி வந்தது. ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில், அரசு விளையாட்டுப் போட்டிகளை கொஞ்சம், கொஞ்சமாக துவங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியா டெஸ்ட் தொடர்
அதனால், திட்டமிட்டபடி நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

பிசிசிஐ சம்மதம்
இந்திய வீரர்கள் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு இடையே ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் என்பதோடு, அங்கே சென்ற உடன் முதல் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும். அதற்கு சம்மதம் கூறி உள்ளார் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால்.

வேறு வழியில்லை
இந்திய வீரர்களை இரு வார தனிமையில் வைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு புத்தம் புதிய ஹோட்டலை தயார் செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து கிரிக்கெட்டை மீட்டு எடுக்க வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் இருப்பதால் பிசிசிஐ இந்த தொடரில் பங்கேற்க வேறு வழியின்றி ஒப்புக் கொள்ளும் என பிசிசிஐ வட்டாரம் கூறுகிறது.

ஐந்து டெஸ்ட்?
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஐந்து போட்டிகளாக மாற்ற முயற்சி செய்து வருகிறது. அப்படி செய்தால் ஆஷஸ் தொடருக்கு இணையாக இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரையும் மாற்றலாம் என நினைக்கிறது. இதற்கு பிசிசிஐ ஒப்புக் கொள்ளுமா? என்பது மட்டுமே இப்போது உள்ள கேள்வி.


Click it and Unblock the Notifications