Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பரிசுத் தொகை அறிவிப்பு.. பிசிசிஐ தந்த ஜாக்பாட்

மும்பை: மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்த இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வழங்கும் பரிசுத்தொகையை விட அதிக தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டியில், ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. இதன் மூலம், இந்திய மகளிர் கிரிக்கெட்டின் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது.

BCCI announce prize money for World Cup-Winning Indian Women s Team Massive 51 Crore Bonus

இதற்கு முன் 2005 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியைத் தழுவிய இந்திய அணி, இம்முறை சொந்த மண்ணில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

ஐசிசியை மிஞ்சிய பிசிசிஐயின் பரிசு மழை:

இந்த உலகக்கோப்பையை வென்றதன் மூலம் இந்திய அணிக்கு, ஐசிசி சார்பில் 4.48 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 39.78 கோடி ரூபாய்) பரிசுத்தொகையாக வழங்கப்படும். இந்நிலையில், பிசிசிஐ, ஐசிசி வழங்கும் தொகையை விட கூடுதலாக, 51 கோடி ரூபாயை இந்திய அணிக்கு ஊக்கப்பரிசாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா அளித்த பேட்டியில், "உலகக்கோப்பை போன்ற ஒரு கடினமான தொடரை வென்ற இந்திய வீராங்கனைகளைப் பாராட்டும் விதமாக இந்த பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான், ஐசிசியின் தலைவராக இருக்கும் ஜெய் ஷாவின் முயற்சியால் மகளிர் உலகக்கோப்பைக்கான பரிசுத்தொகை சுமார் 300 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதற்காக நாங்கள் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், "ஐசிசி வழங்கும் பரிசுத்தொகையைத் தொடாமல், பிசிசிஐ தன்னிச்சையாக இந்த 51 கோடி ரூபாயை இந்திய அணிக்கு வெகுமதியாக வழங்குகிறது. இந்தத் தொகை, அணியின் வீராங்கனைகள், தேர்வாளர்கள் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தார் தலைமையிலான துணைப் பணியாளர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்" என்றும் உறுதிப்படுத்தினார்.

இந்தியாவின் ஆதிக்கம்:

இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி, தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மாவின் அதிரடியான 87 ரன்கள் குவிப்பின் உதவியுடன் 298 ரன்கள் குவித்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு, அதன் கேப்டன் லாரா வோல்வார்ட் சதம் அடித்து நம்பிக்கை அளித்தார். இருப்பினும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்குத் தடை போட்டார். இறுதியில், தென்னாப்பிரிக்க அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பேட்டிங்கில் கலக்கிய ஷஃபாலி வர்மா, பந்துவீச்சிலும் இரண்டு முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகி விருதை வென்றார். இந்திய அணியின் இந்த வெற்றி, பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் வெளிப்படுத்தப்பட்ட சிறப்பான கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, இந்திய மகளிர் கிரிக்கெட்டில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்றும், எதிர்கால சந்ததியினருக்கு பெரும் உத்வேகமாக அமையும் என்றும் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Story first published: Monday, November 3, 2025, 9:53 [IST]
Other articles published on Nov 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+