மும்பை :2024 ஆம் ஆண்டில் மிகப்பெரிய தொடராக பார்க்கப்படுவது இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி தான் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலிய போன்ற கோட்டையில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெறுவது என்பதெல்லாம் அதுவும் டெஸ்ட் தொடரில் முடியாத காரியம்.
அப்படிப்பட்ட ஒரு சாதனையை தான் இந்தியா செய்திருக்கிறது. இந்த நிலையில் ஹர்ட்ரிக் தொடர் கைப்பற்றும் உத்வேகத்துடன் கம்பீர் பயிற்சியாளராக இருக்கும்போது இந்தியா, ஆஸ்திரேலியா செல்கிறது. நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது.

இது முடிந்தவுடன் இந்தியா நேரடியாக ஆஸ்திரேலியா செல்கிறது. இதில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடந்த டெஸ்ட் தொடரின் போது இந்திய அணி எந்த ஒரு பயிற்சி போட்டியிலும் பங்கேற்காமல் இருந்தது. ஆனால் கம்பீர் தற்போது பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கும்போது தங்களுக்கு கண்டிப்பாக பயிற்சி ஆட்டம் வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதை அடுத்து பிசிசிஐ அதிகாரிகள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் பேசியிருக்கிறார்கள். இதனை அடுத்து நவம்பர் 15 ஆம் தேதி முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா பங்கேற்கிறது. இதில் இந்திய அணியை இரண்டாகப் பிரித்து இந்த போட்டியில் பங்கேற்பார்கள் என தெரிகிறது.
இதனை அடுத்து நவம்பர் 22 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்த முதல் டெஸ்ட் முடிவடைந்த உடன் இரண்டாவது டெஸ்ட் பகல் இரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இதே ஆஸ்திரேலியா மண்ணில் பகல் இரவு ஆட்டத்தில் அடிலெய்டில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மோசமான தோல்வியை தழுவியது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 36 ரன்களில் ஆட்டம் இழந்தனர் . இது இந்தியாவுக்கு மிகப்பெரிய மானக்கேடு பிரச்சனையாக மாறியது.
இந்த தொடரில் இப்படி ஒரு சறுக்கலை தடுக்க இந்தியா ஒரு புதிய முயற்சி ஏற்படுத்தி இருக்கிறது. அதன்படி முதல் டெஸ்ட் முடிவடைந்த உடன் இரண்டு நாள் பகல் இரவு பயிற்சி டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்க இந்தியா முடிவு எடுத்திருக்கிறது. அதன்படி நவம்பர் 30 மற்றும் டிசம்பர் ஒன்றாம் தேதி இரண்டு நாள் பகல் இரவு பயிற்சி ஆட்டத்தில் இந்தியா பங்கேற்கிறது
இதன் மூலம் அடிலெய்டில் நடைபெற உள்ள பகல் இரவு போட்டிக்கு தயாராக முடியும் என இந்தியா நினைக்கிறது. அது மட்டும் அல்லாமல் இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு இந்தியா ஏ அணி ஆஸ்திரேலியாவுக்கு அக்டோபர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு நாட்கள் நடைபெறும் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.