மும்பை : உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் இல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால் அதனை எப்படியாவது வெல்ல வேண்டும் என்று பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக பல்வேறு முயற்சிகளை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்திய அணியில் தற்போது ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது. ஒரு காலத்தில் பேட்டிங் வரிசையில் ஏழு பேருக்கு மட்டுமே பேட்டிங் விளையாட தெரியும். நான்கு பேர் பந்துவீச்சாளராக இருப்பார்கள். தற்போது காலம் மாறி வருவதால் 8 அல்லது 9 பேர் பேட்டிங் தெரிந்தவர்களாக ஒவ்வொரு அணியிலும் இருக்கிறார்கள்.
ஆனால் இந்தியாவில் பேட்டிங் வரிசையில் நம்பர் ஏழாவது இடம் வரைக்குமே வீரர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஆல்ரவுண்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் சர்துல் தாக்கூர், தீபக் சாஹர் ஆகியோரை அணியில் சேர்க்கலாமா? இல்லை பேட்டிங் தெரிந்த சுழற் பந்துவீச்சாளர்களான அக்சர் பட்டேல், அஸ்வினை சேர்க்கலாமா என கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே இடது கை பேட்ஸ்மேன் இடது கை சுழற் பந்துவீச்சாளரான ஜடேஜா இருப்பதால் அக்சர் பட்டேலுக்கு இடம் கிடைக்காது. இதனால் அஸ்வினை அணியில் சேர்க்கலாம் என்ற யோசனையில் இந்திய அணி நிர்வாகம் இருக்கிறது. இதற்காக அஸ்வினை தயார் நிலையில் இருக்கும் படி தேர்வுக்குழு கூறி இருப்பதாக தெரிகிறது.தேவை ஏற்பட்டால் எப்போது வேண்டுமானாலும் அணியில் இடம்பெறக்கூடும் என்றும் பி சி சி ஐ அறிவுறுத்தி இருக்கிறதாம்.
இதனால் அஸ்வினும் தன்னுடைய பயிற்சியை தொடங்கி விட்டாராம். காரணம் டெஸ்டில் மட்டும் தற்போது விளையாடி வரும் அஸ்வின் இனி டிசம்பர் மாதம் தான் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடப் போகிறார். இதன் காரணமாக பயிற்சி செய்யாமல் இருக்க வேண்டாம் என்றும் உடல் தகுதி மற்றும் போட்டிக்கு எப்போது வேண்டுமானாலும் தயாராக இருக்கும்படியும் தேர்வுக்குழு அறிவுறுத்தி இருக்கிறதாம். 2011 உலக கோப்பையிலும் அஸ்வின் இடம்பெற்று இருந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் அணிக்கு வர வாய்ப்பு இருக்கிறது.