சென்னை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக ஐபிஎல் நிர்வாகக் குழு புதிய விதிகள் சிலவற்றை அமல்படுத்தி உள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேட்ட ஒரு விதியை அமல்படுத்தியுள்ளது. அந்த விதியை அமல்படுத்த கூடாது என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் சில மாதங்கள் முன்பு நடந்த ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
ஆனாலும், பிசிசிஐ அந்த விதியை அமல்படுத்தி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கும் தோனி 2025 ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வமாக இருக்கிறார். ஆனால், அவருக்கு அதிக சம்பளம் கொடுத்தால் இளம் வீரர்களை ஏலத்தில் வாங்குவதில் சிரமம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் தோனி ஒரு முடிவை எடுத்தனர்.

அதாவது தோனியை உள்ளூர் வீரராக தக்க வைத்தால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், அதற்கான விதியை பிசிசிஐ சில ஆண்டுகளுக்கு முன்பே நீக்கி இருந்தது. ஒரு இந்திய வீரர் ஐந்து ஆண்டுகளுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்தால், அவர் உள்ளூர் வீரராக கருதப்படுவார் என்பதே அந்த விதி.
ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டத்தில் அந்த விதியை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என சிஎஸ்கே சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு மற்ற அணிகள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காத போதும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் எதிர்ப்பை தெரிவித்து இருந்ததாக அப்போது செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்திய அணிக்காக ஆடிய ஒரு வீரரை உள்ளூர் வீரர் என அறிவித்து, அவருக்கு குறைவான சம்பளம் கொடுப்பது அவரை அவமதிக்கும் செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார். ஆனாலும், அந்த விதி அமல்படுத்தப்பட்டால் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கும் பலன் கிடைக்கும் என்பதால் அந்த அணிகளும் அந்த விதியை ஆதரித்தன.
தோனி ஐபிஎல் தொடரில் விளையாடினால் அதனால் ஐபிஎல் தொடரின் வியாபார மதிப்பு அதிகரிக்கும். தோனி ஆடும் ஒவ்வொரு போட்டியின் போதும் அவரின் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள். அது ஐபிஎல்-இன் ஒட்டுமொத்த சந்தை மதிப்பை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. மேலும் தோனி பேட்டிங் ஆடும் போது நேரலையில் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பல கோடிகளை எட்டுகிறது.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு ஐபிஎல் நிர்வாக குழு உள்ளூர் வீரருக்கான விதிகளில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி 2019 ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணியில் விளையாடாத தோனி, 2025 ஐபிஎல் தொடரில் உள்ளூர் வீரராக கருதப்படுவார். அவருக்கு நான்கு கோடி மட்டுமே சம்பளம் ஆக அளிக்கப்படும். இதன் மூலம் அவரை சிஎஸ்கே அணி தக்க வைக்கும்.