இனியும் பொறுக்க முடியாது.. கம்பீர் - ஸ்ரேயாஸ் நாடு திரும்பியவுடன் மீட்டிங்.. பிசிசிஐ அதிருப்தி
மும்பை: இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து டி20 தொடரில் இந்திய அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், அது குறித்து ஆலோசிக்க பிசிசிஐ உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளது. இதை அடுத்து தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பதவிக்கு ஆபத்தா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சமீபத்தில் 2026 டி20 உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி, அதற்குப் பின் விளையாடிய டி20 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்திய அணி விளையாடிய 6 டி20 போட்டிகளில், 5 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதில் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரை முதன்முறையாக இழந்ததும் அடங்கும். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் இந்திய அணியின் செயல்பாடு மோசமாக அமைந்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறுகையில், "இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்பதை பிசிசிஐ உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஆனால், இதற்காக அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இது போன்ற மோசமான காலக்கட்டங்கள் வருவது இயல்பான ஒன்றுதான். ஜூலை 19ஆம் தேதி ஒருநாள் தொடர் முடிந்து இந்திய அணி திரும்பியதும், அணியின் முக்கிய உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். இங்கிலாந்தில் என்ன தவறு நடந்தது என்பது குறித்தும், அதை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்தும் மட்டுமே இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்" என்றார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அடுத்து ஜிம்பாப்வே டி20 தொடருக்குச் செல்ல உள்ளதால் டி20 அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த கூட்டத்தில் பங்கேற்பாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. கௌதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி ஏற்கனவே இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளதால், அவரது பயிற்சியாளர் பதவி தற்போதைக்கு பாதுகாப்பாகவே இருக்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications
