சென்னை : இந்திய டெஸ்ட் அணியில் தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு இடம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. இந்திய அணியில் வீரர்களை தேர்வு செய்யும் போது தமிழகத்திலிருந்து அஸ்வினை எடுத்து விட்டால் போதும் என்ற நிலையில் தேர்வு குழுவினர் இருப்பதாகவும் மற்ற வீரர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
ரஞ்சி கிரிக்கெட்டில் ஒரு சீசன் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கெல்லாம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. குறிப்பாக நேற்று கே எல் ராகுல் காயம் அடைந்த பிறகு திடீரென்று யாருமே எதிர்பார்க்காத வகையில் படிக்கலுக்கு தேர்வு குழுவினர் வாய்ப்பளித்திருக்கிறார்கள்.

ஆனால் எட்டு ஆண்டுகளாக ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழக கிரிக்கெட் வீரர் பாபா இந்திரஜித் பெயரை தேர்வு குழுவினர் பரிசீலனை கூட செய்யவில்லை. இது தமிழக ரசிகர்கள் மத்தியில் கடுப்படைய செய்திருக்கிறது. ஒரு சீசனில் நன்றாக விளையாடிய வீரர்களை எல்லாம் தேர்வு செய்யும் போது பாபா இந்திரஜித் எவ்வாறு கடந்த எட்டு ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை தற்போது பார்க்கலாம்.
இந்த எட்டு ஆண்டுகளில் அவர் ரஞ்சி கிரிக்கெட்டில் 3,152 ரன்கள் அடித்திருக்கிறார். சராசரி 58 என்ற அளவில் இருக்கிறது. இதில் 10 சதம், 21 அரை சதமும் அடங்கும். தன்னுடைய 62 இன்னிங்ஸில் பாபா இந்திரஜித் 31 முறை 50 ரன்கள் அடித்திருக்கிறார். அதுவும் குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுவது கஷ்டம் என்று அறியப்படும் நிலையில் அதில் பாபா இந்திரஜித் தொடர்ந்து 50 ரன்கள் அடித்திருக்கிறார்.
ஒவ்வொரு சீசனிலும் பாபா இந்திரஜித் தற்போது எவ்வாறு விளையாடி இருக்கிறார் என்பதை பார்க்கலாம் 2016 ஆம் ஆண்டு 697 ரன்கள் பாபா இந்திரஜித் அடித்திருக்கிறார். 2017 ஆம் ஆண்டு 405 ரன்கள், 2018 ஆம் ஆண்டு 641 ரன்களும் பாபா இந்திரஜித் அடித்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டு 89 ரன்கள் மட்டுமே பாபா இந்திரஜித் அடித்திருந்தார். இதற்கு காரணம் அவர் காயம் ஏற்பட்டதால் அந்த தொடரில் விளையாடவில்லை.
2021 ஆம் ஆண்டு 396 ரன்களும்,2022 ஆம் ஆண்டு 505 ரன்கள், 2023 ஆம் ஆண்டு 419 ரன்களும் பாபா இந்திரஜித் இப்படி கடந்த 8 ஆண்டுகளாகவே தரமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். எனினும் தற்போது இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் எல்லாம் ஒரே சீசனில் கிட்டத்தட்ட ஆயிரம் ரகளை அடித்து மற்ற சீசன்களில் சொதப்பி இருக்கிறார்கள்.
ஆனால் பாபா இந்திரஜித் ஆயிரம் ரன்களை அடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து ஒரே மாதிரியான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பாபா இந்திரஜித் தன்னுடைய பேட்டிங்கில் நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் தான் விளையாடுகிறார். இதன் மூலம் அதிக பந்துகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைப்பதில்லை. மேலும் தமிழக அணி ரஞ்சி போட்டியில் பெரிய அளவு நாக் அவுட் சுற்று போட்டிகள் எல்லாம் தகுதி பெறவில்லை.
இதனால் ஆண்டு தோறும் அவர் இரண்டு அல்லது மூன்று கூடுதல் போட்டிகள் விளையாடும் வாய்ப்பை தவறவிடுகிறார். இதில் சோகமான விஷயம் என்னவென்றால் இந்தியா ஏ, இராணி கோப்பை, துலீப் கோப்பை போன்ற தொடருக்கு கூட பாபா இந்திரஜித் பரிசளிக்கப்படவில்லை. ஒரு ஆண்டுக்கு முன் துலீப் கோப்பை இறுதிப்போட்டியில் பாபா இந்தர்ஜித் சதம் கூட அடித்து இருந்தார். பாபா இந்திரஜித்தால் சில ஓவர்கள் கூட பந்து வீச முடியும். இதுபோன்ற தமிழகத்தில் பல திறமையான வீரர்கள் இருந்தும் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.