
தேசிய கிரிக்கெட் அகாடமி
பிசிசிஐ விதிகளின்படி ஒரே நபர் இரண்டு பதவிகளில் இருக்கக் கூடாது என்பதால், ராகுல் டிராவிட் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பதவிக்கு புதிய நபரை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய இயக்குநராக விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்படலாம் எனக் கடந்த சில வாரங்களுக்கு முன்னரே செய்திகள் வெளியானது. முதலில் விவிஎஸ் லட்சுமண் மறுத்தாலும் பின்னர், பிசிசிஐ தலைவராக உள்ள கங்குலியே தனிப்பட்ட முறையில் லட்சுமணிடம் பேசியதாகவும் தகவல் வெளியானது.

விவிஎஸ் லட்சுமண்
இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பொறுப்பை விவிஎஸ் லட்சுமண் ஏற்கவுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கங்குலியை தொடர்பு கொண்டு கேட்ட போது அதை அவர் உறுதி செய்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நிர்வாக பொறுப்பில் இருப்பது எப்போதும் கிரிக்கெட் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்பதே கங்குலியின் நிலைப்பாடு. அவர் எடுத்த தீவிர முயற்சிக்குப் பின்னரே ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கச் சம்மதித்தார்.

கங்குலி விருப்பம்
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பயிற்சியாளரோடு என்சிஏ தலைமையும் இணைந்து செயல்பட்டுவருகிறது. இந்த சூழலில் மீண்டும் டிராவிட் - லட்சுமண் கைகோர்க்கும்பட்சத்தில் அது இந்தியாவுக்கு அதிக நன்மைகளைத் தரும் என்பதால் பிசிசிஐ தலைவர் கங்குலி மட்டுமின்றி செயலாளர் ஜெய் ஷா உட்பட முக்கிய நிர்வாகிகளும் அதையே தான் விரும்பிகன்றனர். விவிஎஸ் லட்சுமணன் தனது குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவிட விரும்புவதாலேயே முதலில் இந்தப் பதவியை ஏற்கத் தயக்கம் காட்டினார் என்றும் பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிராவிட் கருத்து
இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள டிராவிட், ஏற்கனவே ரவி சாஸ்திரி அமைத்து தந்தை அடித்தளத்தைச் சரியாகப் பயன்படுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ரவி சாஸ்திரியின் கீழ், அணி சிறப்பாகச் செயல்பட்டது. இதை அப்படியே தொடர வேண்டும் என்பதே விருப்பம். ஏற்கனவே தேசிய கிரிக்கெட் அகாடமி, யு 19 அணி, மற்றும் இந்தியா A அணிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றியதால் அவர்களது மைன்ட் செட் எனக்குத் தெரியும்.

அடுத்த 2 ஆண்டுகள்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணி பல முக்கிய தொடர்களில் பங்கேற்கவுள்ளதால் அணியைச் சரியாகக் கட்டமைப்பது முக்கியம். இந்தி வீரர்களுடன் பணியாற்ற மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன்" என்று அவர் தெரிவித்தார். ஏற்கனவே, ரோகித் ஷர்மா, அஸ்வின் ஆகிய வீரர்களும் ராகுல் டிராவிட் உடன் இணைந்து பணியாற்ற மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











