2023ல் 50 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கும்... ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த பிசிசிஐ!
டெல்லி: 2023ல் நடக்கும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா நடத்தும் என்று பிசிசிஐ அறிவித்து இருக்கிறது. இன்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லியில் நீண்ட நாட்களுக்குப் பின் இன்று பிசிசிஐ கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இந்திய அணி அடுத்து விளையாடும் போட்டிகளை குறித்தும் தொடர்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதுமட்டும் இல்லாமல் தற்போது இந்திய அணியில் வீரர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு நடந்த பிசிசிஐ கூட்டத்தில் வீரர்களின் சம்பள உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் டெஸ்ட்
இந்த பிசிசிஐ கூட்டத்தில் வித்தியாசமான முடிவு ஒன்று எடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி 2019-2020க்கு இடையில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் நாட்டில் டெஸ்ட் தொடர் விளையாட செல்லும் என்று கூறப்பட்டு இருக்கிறது. கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா முதல்முறையாக ஆப்கானிஸ்தான் அணியுடன் டெஸ்ட் போட்டி விளையாட போகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னேற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

சாம்பியன் டிராபி
இந்த கூட்டத்தில் 2021ல் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை இந்திய அணியே நடத்தும் என்று முடிவாகியுள்ளது. 2006ல் கடைசியாக இந்தியா சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது இலங்கை அணியுடன் இந்தியா சாம்பியன் கோப்பையை இணைந்து வழங்கியது. பொதுவாக 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியா எப்போதும் சிறந்த அணியாக இருந்துள்ளது.

2023 உலகக் கோப்பை
இந்த நிலையில் இந்த கூட்டத்தில் சர்ப்ரைஸ் முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023 உலகக் கோப்பை போட்டியை இந்தியா நடத்தும் என்றும் உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2011 உலகக் கோப்பை போட்டியை போல இல்லாமல் தனியாக இந்த போட்டியை நடத்தும் என்றும் கூறியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் இப்போதே ஆரம்பிக்கும் என்றும் மிகவும் பெரிய அளவில் இந்த போட்டிகள் நடத்தப்படும் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.

2011ல் நடந்த உலகக் கோப்பை
2011ல் நடந்த உலகக் கோப்பை போட்டியை இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகள் சேர்ந்து நடத்தியது. இதன் இறுதி ஆட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் கடைசியாக டோணி சிக்ஸ் அடித்து, இலங்கையை வீழ்த்தி இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் தற்போது 2023ல் மீண்டும் இந்தியா உலகக் கோப்பை போட்டியை நடத்தும் என்று முடிவாகி இருக்கிறது. இந்த புதிய அறிவிப்பால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications