வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் சாதாரணமா அயர்லாந்தில் நடக்கக் கூடாது.. பிசிசிஐ போட்ட பிரம்மாண்ட கணக்கு
பெல்பாஸ்ட்: இந்திய டி20 அணியில் 15 வயதே ஆன இளம் அதிரடி பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகம் தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டே இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வியையும் விவாதத்தையும் எழுப்பியுள்ளது. அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலேயே அவர் அறிமுகமாகிவிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. இத்துடன் அயர்லாந்து தொடரும் முடிவுக்கு வந்துள்ளதால், சூர்யவன்ஷி எப்போதுதான் இந்திய அணியில் விளையாடுவார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து இது குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் பரவி வருகிறது. வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகமானது சாதாரணமான ஒன்றாக இல்லாமல், மிகவும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பிசிசிஐ அவரது அறிமுகத்தை அயர்லாந்து தொடரில் நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.

அயர்லாந்து தொடரை முடித்துள்ள இந்திய அணி, அடுத்து இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வரலாற்று மைதானங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி, இரண்டாவது டி20 போட்டி மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்திலும், மூன்றாவது டி20 போட்டி நாட்டிங்ஹாம் நகரில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்திலும், ஐந்தாவது டி20 போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள தி ரோஸ் போல் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
இங்கிலாந்தின் இந்த புகழ்பெற்ற மைதானங்கள் தான் சூர்யவன்ஷியின் அறிமுகத்திற்குச் சரியான இடமாக இருக்கும் என்று சில பிசிசிஐ அதிகாரிகள் கருதுகின்றனர். கிரிக்கெட்டை உருவாக்கியதாகச் சொல்லப்படும் இங்கிலாந்து மண்ணில், ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் வகையில் அவரது அறிமுகம் அமைய வேண்டும் என்று பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 5 போட்டிகள் இருப்பதால், முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், எவ்வித அழுத்தமும் இன்றி சூர்யவன்ஷியை அறிமுகப்படுத்தலாம் என்றும் கணக்கு போடப்பட்டுள்ளது. அப்போது அவரது அறிமுகம் குறித்து யாரும் விமர்சிக்க மாட்டார்கள் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இதனால், கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தின் ஏதேனும் ஒரு புகழ்பெற்ற மைதானத்தில் தான் வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் சர்வதேச போட்டியை விளையாடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
