
செப்டம்பர் இறுதியில் நடத்த திட்டம்
ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில் டி20 உலக கோப்பை தொடர் ரத்து குறித்த அறிவிப்பை ஐசிசி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானால் செப்டம்பர் இறுதியில் துவங்கி நவம்பர் வரையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

பிசிசிஐ தலைவர் திட்டவட்டம்
இந்த ஆண்டு ஐபிஎல் இல்லாமல் நிறைவு பெறாது என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கூடியவரையில் இந்தியாவில் இந்த தொடர் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில், யூஏஇயில் ஐபிஎல் 2020 நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ திட்டம்
இதனிடையே, வீரர்களின் பயிற்சி முகாம் குறித்தும் பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. யூஏஇயில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டால், முன்னதாக துபாயில் பயிற்சி முகாம்களை நடத்துவதே சிறப்பானதாக இருக்கும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து நேற்று நடைபெற்ற பிசிசிஐ நிர்வாகிகள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் பிரதிநிதிகள் குழு கூட்டத்தில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பயிற்சி முகாம் நடத்த திட்டம்
மேலும் துபாய் மட்டுமின்றி, அகமதாபாத்தின் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள மோதேரா மைதானத்திலும் தர்மசாலாவிலும் பயிற்சி முகாம்களை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரம் கூடவுள்ள ஐசிசி நிர்வாகிகள் குழு கூட்டத்தில் டி20 உலக கோப்பை தொடர் குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிசிசிஐ சார்பில் செயலாளர் ஜெய் ஷா பங்கேற்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications











