டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நடத்தும் கிரிக்கெட் அணியை, "டீம் இந்தியா" அல்லது "இந்திய தேசிய கிரிக்கெட் அணி" என்று அழைப்பதற்குத் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, "நீதிமன்றத்தின் நேரத்தை அப்பட்டமாக வீணடிக்கும் செயல்" என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டது. மனுதாரரைக் கடுமையாகச் சாடிய நீதிமன்றம், சர்வதேச அளவில் விளையாட்டு அமைப்புகள் எப்படிச் செயல்படுகின்றன என்பது குறித்த ஒரு பாடத்தையே நடத்தியது.
வழக்கறிஞர் ரீபக் கன்சல் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவின் முக்கிய வாதங்கள் இதுதான் -

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் வாதங்களைக் கடுமையாக நிராகரித்தது. "இது நீதிமன்றத்தின் நேரத்தையும், உங்கள் நேரத்தையும் அப்பட்டமாக வீணடிக்கும் செயல்" என்று நீதிபதிகள் மனுதாரரிடம் நேரடியாகவே தெரிவித்தனர்.
நீதிபதி துஷார் ராவ் கெடேலா, சர்வதேச விளையாட்டு விதிகளைச் சுட்டிக்காட்டி கேள்விகளை எழுப்பினார்: "சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விதிகள் உங்களுக்குத் தெரியுமா? அதன்படி, விளையாட்டு அமைப்புகளில் அரசு எந்தவிதத்திலும் தலையிடக் கூடாது. கடந்த காலங்களில், எப்போதெல்லாம் விளையாட்டுச் சம்மேளனங்களில் அரசு தலையிட்டதோ, அப்போதெல்லாம் இந்திய ஒலிம்பிக் கமிட்டி மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?"
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC), ஃபிஃபா (FIFA) போன்ற சர்வதேச விளையாட்டு அமைப்புகளின் விதிகளின்படி, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள விளையாட்டுச் சம்மேளனங்கள், அரசின் தலையீடு இல்லாமல் தன்னாட்சியாகச் செயல்பட வேண்டும். ஒருவேளை, ஒரு நாட்டின் அரசு, அந்த நாட்டின் விளையாட்டு அமைப்பின் செயல்பாடுகளில் தலையிட்டால், அந்த சர்வதேச அமைப்புகள், அந்த நாட்டின் அணிகளை சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கும் அபாயம் உள்ளது.
இந்த சர்வதேச நடைமுறையைச் சுட்டிக்காட்டியே, டெல்லி உயர் நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்துள்ளது. ஒரு தனியார் அமைப்பாக இருந்தாலும், பிசிசிஐதான் இந்தியாவில் கிரிக்கெட்டை நிர்வகிக்கும் உச்சபட்ச அமைப்பு. அது தேர்வு செய்யும் அணிதான், சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது என்பதே உலகளாவிய நடைமுறை.
இந்த மனு அடிப்படை ஆதாரமற்றது என்றும், சர்வதேச விளையாட்டு விதிகளைப் புரிந்துகொள்ளாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறி, நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்து, இந்த விவாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.