தோனியை கூப்பிட்டே கேளுங்களேன்..! உங்களால முடியுமா? பிசிசிஐக்கு செக் வைத்த கேசவ் பானர்ஜி
ஜார்க்கண்ட்: ஓய்வை பற்றியே பேசி வரும் பிசிசிஐ, இது குறித்து தோனியை நேரில் அழைத்து அவரிடமே கேட்டு விடலாம் என்று சிறுவயது பயிற்சியாளர் கேசவ் பேனர்ஜி கூறினார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததில் இருந்து தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பது குறித்து தான் அதிக அளவில் பேச்சுகள் எழுந்து வருகின்றன. ஆனால் தோனி அது குறித்து இன்று வரை கவலைப்பட்டதாக தெரியவில்லை. தமது ஓய்வு பற்றிய எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை என்றும் 2 மாதம் தற்காலிக ஓய்வு எடுத்துக் கொள்வதாகவும் தோனி அறிவித்திருந்தார். இந்நிலையில் தோனியின் சிறுவயது பயிற்சியாளர் பானர்ஜி தோனி ஓய்வு குறித்தும் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை குறித்தும் முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

வாழ்க்கை இருக்கிறது
அவர் கூறி இருப்பதாவது: தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் இருக்கிறது அது எனக்கு தெரியும். சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவிற்கு தோனி இன்னும் உடற் தகுதியுடன் தான் இருக்கிறார்.

தோனியை அழையுங்கள்
தோனியால் முன்பை விட இன்னும் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க முடியும். பிசிசிஐயோ, அவரது ஓய்வு அறிவிப்பினை மட்டுமே எதிர் பார்க்கின்றனர். ஆனால் தோனியை அழைத்து அவர்கள் பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

எப்படி தெரியும்?
கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலத்திலிருந்து தோனியை பற்றி எனக்கு நன்றாக தெரியும். தோனி ஓய்வு குறித்து அவரின் நண்பர்களுக்குக் கூட தெரியாத போது நான் எப்படி அறிந்து வைத்திருக்க முடியும்?

ஆலோசனை
ஆனால் தோனியால் நிச்சயம் இன்னும் 2 ஆண்டுகள் விளையாட முடியும் என்று நான் நினைக்கிறேன். எனவே இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து பெற வேண்டும். ஆகையால், தோனியின் தனிப்பட்ட முடிவை பிசிசிஐ நேரில் அழைத்து அவரிடமே கேட்டு கொள்ளலாம் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications