சென்னை: முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கான மாதாந்திர உதவித் தொகையை 50 சதவீதம் அதிகரித்து இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.
இதுதொடர்பாக இன்று சென்னையில் கூடிய கிரிக்கெட் வாரியத்தின் அவசர போர்டு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சென்னையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் என்.சீனிவாசனும் கலந்து கொண்டார். அரை மணி நேரத்தில் இன்றைய கூட்டம் முடிந்து விட்டது. அப்போது முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கான மாதாந்திர உதவித் தொகையை 50 சதவீதம் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி அதிகபட்சம் ரூ. 50,000 மாதாந்திர உதவித் தொகையாக வழங்கப்படும்.

வருகிற ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து இந்த புதிய உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள பல்வேறு உத்தரவுகள், வழிகாட்டுதல்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் வருடாந்திர பொதுக் குழுக் கூட்டத்தை மார்ச் 2ம் தேதி சென்னையில் நடத்துவது என்றும் இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அன்றைய கூட்டத்தில் புதிய தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுவார். மார்ச் 2ம் தேதி காலை 9.30 மணிக்கு வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று வாரியம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தின்போது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். தற்போதைய இடைக்காலத் தலைவர் ஷிவ்லால் யாதவ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று தெரிகிறது. ஆனால் சீனிவாசன் போட்டியிடுவாரா என்பது தெரியவில்லை. அவர் தற்போதைய நிலையில் சட்டப்படி போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.