6 முன்னணி வீரர்களுக்கு செக்.. இனி வாய்ப்பே கிடையாதாம்.. பிசிசிஐ அனுப்பிய முக்கிய சுற்றறிக்கை- விவரம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள 6 முன்னணி வீரர்களுக்கு இனி வாய்ப்பே கொடுக்க மாட்டோம் என பிசிசிஐ சார்பில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன. இந்த தொடர்கள் வரும் ஜனவரி 3ம் தேதி தொடங்கி ஜனவரி 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த இரண்டு தொடர்களுக்குமான தனித்தனி இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இந்தியாவின் எதிர்காலமாக பார்க்கப்படும் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளன.

அணியில் மாற்றம்
டி20 தொடருக்கான இந்திய அணியில் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படவுள்ளார். துணைக்கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். கே.எல்.ராகுல் கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். விராட் கோலி, ரிஷப் பண்ட் போன்ற பல வீரர்களும் தேர்வு செய்யப்படவில்லை.

பிசிசிஐ அதிரடி முடிவு
இந்நிலையில் 6 சீனியர்களுக்கு பிசிசிஐ தேர்வுக்குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதாவது இந்திய அணி இனி விளையாடும் ஒவ்வொரு டி20 கிரிக்கெட் போட்டியும், 2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையின் திட்டமாக தான் இருக்கும். எனவே அந்த திட்டத்தில் இருந்து 6 வீரர்கள் நிரந்தரமாக நீக்கப்படுகின்றனர் என்றும், அவர்களுக்கு வாய்ப்பு தர முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

யார் அந்த 6 பேர்?
அதன்படி ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார் போன்றோரும் நிரந்தரமாக டி20 அணியில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் திட்டத்தில் இல்லை தான். ஆனால் முக்கியமான நேரங்களில் மட்டும் அவர்கள் அணிக்கு அழைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. எனினும் அவர்களிடத்தில் எதையும் எதிர்பார்க்காதீர்கள் என தெரிவிக்கப்பட்டுவிட்டன.

பண்ட்-ன் நிலைமை
இந்திய அணியின் துணைக்கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் இனி தன்னை நிரூபித்தால் மட்டுமே டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல ரிஷப் பண்ட்-க்கு மாற்று வீரர்களாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் சிறப்பாக இருப்பதால், அவரும் தனது ஃபார்மை நிரூபித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications